விடிய விடிய ரெய்டு.. வேலையை முடித்த ஐடி.. கரூரில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு
கரூர்: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில் இன்று காலை நிறைவடைந்து இருக்கிறது. கொங்கு மெஸ் மணி, பால விநாயகா கல்குவாரி தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை தொடங்கிய நிலையில் தற்போது சோதனை முடிந்து இருக்கிறது.
கடந்த மே மாதம் கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் கொங்கு மெஸ் மணி உள்ளிட்டோர் வீடுகளிலும், அரசு ஒப்பந்ததாரர்கள், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஐடி சோதனை நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறை, அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் நாள் முழுவதும் அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டது.
இறுதியில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இன்று அவருக்கு நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில், அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று உயர்நீதிமன்ற 3 வது நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார். இந்த நிலையில் நேற்று கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 11 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.
கொங்கு மெஸ் மணி, அவருக்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள், பால விநாயகா கல்குவாரி தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற சோதனையை இன்று காலை முடிவுக்கு வந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications