இவ்வளவு நாளா எங்க போனீங்க? தொகுதியில் 6,800 ஊர் இருக்குங்க! எப்படி வர முடியும்? -ஜோதிமணி எம்.பி.!
கரூர்: கரூர் மக்களவை தொகுதியில் மொத்தம் 6,800 ஊர் இருப்பதாகவும் இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் தான் அந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழல் அமைவதாகவும் ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திட்டத்தில் உள்ள ஜோதிமணி எம்.பி., இப்போது தொகுதி முழுவதும் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்துள்ளார். வாரத்தில் 4 நாட்களாவது இப்போது தொகுதிக்குள் ஜோதிமணி டூர் செல்கிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத வகையில் இப்போது தொகுதி முழுவதும் வலம் வருவதன் பின்னணியில் மீண்டும் கரூர் தொகுதியில் களமிறங்குவதில் ஜோதிமணி உறுதியாக உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் கரூரில் உள்ள பூங்கா ஒன்றில் ஆய்வு செய்யச் சென்ற ஜோதிமணி எம்.பி.யிடம், இரண்டரை வருடமாக எங்கே போனீர்கள், இப்ப மட்டும் எதுக்கு வர்றீங்க என அதிமுக கவுன்சிலர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலடி கொடுத்த ஜோதிமணி எம்.பி., தாம் பிரஸ்மீட் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அநாகரீகமாக நடந்துகொள்ள வேண்டாம் என்றதுடன் கரூர் மக்களவை தொகுதியில் உங்கள் ஒரு ஊர் மட்டும் இல்லை என்றும் தொகுதி முழுவதும் 6,800 ஊர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 100 நாட்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டியிருப்பதாகவும் இடைப்பட்ட நாட்களில் தொகுதியில் உள்ள ஊர்களுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தார். ஆனாலும் அந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஜோதிமணி எம்.பி.யை கார்னர் செய்வதிலேயே குறியாக இருந்தார். இதனால் கோபமடைந்த ஜோதிமணி எம்.பி. விறுவிறுவென சென்று காரில் ஏறி அமர்ந்து அங்கிருந்து புறப்பட்டார். அப்போது எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்க என அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஜோதிமணி எம்.பி.யை ஒருமையில் சாடினார்.
இதனால் அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் அதிமுக ஒன்றிய கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்தனர். கரூர் மக்களவை தொகுதியை பொறுத்தவரை மணப்பாறை, விராலிமலை, வேடசந்தூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கரூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.












Click it and Unblock the Notifications