கரூர் நெரிசல் வழக்கு.. மனுவை வாபஸ் பெற மிரட்டுவதாக குற்றச்சாட்டு.. சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு!
கரூர்: கரூர் வழக்கில் மனுதாரர் பிரபாகரன், தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். காவல்துறை தரப்பிலும், உயர் அதிகாரிகள், கட்சி தரப்பிலும் மனுக்களை திரும்பப் பெறக் கூறி மிரட்டுவதாக பிரபாகரன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் சிபிஐ முன்பு முறையிடுங்கள் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது.

நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து, தவெக சார்பிலும், பாஜக வழக்கறிஞர் குழு சார்பிலும், உயிரிழந்தவர்கள் உறவினர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தனது மகள் மற்றும் அவருக்கு நிச்சயிக்கப்பட்டவரை இழந்த பிரபாகரன் என்பவரும் வழக்கு தொடுத்தார். கரூர் கூட்ட நெரிசல் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரினர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.
தானே முன்வந்து சிபிஐ விசாரணை வேண்டும் என வழக்கு கொடுத்ததாகவும் இதனையறிந்து, தி.மு.க ஒன்றியச் செயலாளர் எம். ரகுநாதன் என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் வாங்கினால் ரூ.20 லட்சம் பணம் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும், 'அதை செய்கிறோம், இதைச் செய்கிறோம்' என்றும் பேரம் பேசியதாகவும் பிரபாகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் கரூர் வழக்கில் மனுதாரர் பிரபாகரன், தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். காவல்துறை தரப்பிலும், உயர் அதிகாரிகள், கட்சி தரப்பிலும் மனுக்களை திரும்பப் பெறக் கூறி மிரட்டுவதாக பிரபாகரன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரபாகரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ முன்பு முறையிட வேண்டியதுதானே எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் அழுத்தமாக இருந்தாலும் சிபிஐ முன்பு முறையிடுங்கள் என அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications