Exclusive: அண்ணாமலை சொந்த ஊரை விட்டு கோவைக்கு ஓட காரணமே இதுதான்.. 40க்கு 40 மாற்றமே இல்லை - ஜோதிமணி
கரூர்: போய் கும்பிடு போட்டுவிட்டு எழுந்து வருகிற அரசியல்வாதி நான் இல்லை என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இரவு பகல் பாராமல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் தொகுதி தான் தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது.

கரூரில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.பி ஜோதிமணி, பாஜக சார்பில் வி.வி செந்தில்நாதன், அதிமுக சார்பில் தங்கவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் நமது ஒன் இந்தியா தமிழ் நடத்திய நேர்காணல் இங்கே!
கேள்வி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த தேர்தல் திமுக - அதிமுக இடையேயான போர் தானா? அல்லது திமுக vs பாஜக போட்டியாக மாறிவிட்டதா?
ஜோதிமணி: இது நாடாளுமன்றத் தேர்தல். நரேந்திர மோடியை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு பிரதமர் வேட்பாளரை மக்கள் மனதில் நிறுத்த வேண்டும். தமிழ்நாடு மீது மத்திய அரசு எவ்வளவு தாக்குதலை தொடுக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் வரிப்பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பத் தர மறுக்கிறது என்பது அனைத்து மக்களுக்கும் தெரிகிறது. மத்திய அரசை எதிர்த்து ஸ்டாலின் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
ராகுல் காந்தியின் நடைபயணம் குமரி முதல் காஷ்மீர் வரை நடந்தது குறித்து மக்கள் மத்தியில் புரிதல் உள்ளது. மோடி அரசுக்கு எதிராக தேசிய அளவில் மிகத் தீவிரமாக செயலாற்றும் தலைவராக ராகுல் காந்தி உள்ளார். அவரது குடும்பப் பாரம்பரியமும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகிய 2 தலைவர்களும் இந்த தேர்தலில் பெரிய அச்சாணியாக இருக்கின்றனர். இவர்களை மீறி பாஜக, அதிமுகவுக்கு இங்கு எந்த அலையும் இல்லை.
கேள்வி: 3 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை தமிழ்நாட்டில் இல்லை என்கிறீர்களா?
ஜோதிமணி: நான் தொடர்ச்சியாக தொகுதிக்குள் பயணித்து மக்களை சந்தித்து வருகிறேன். எனது கரூர் தொகுதி 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. வெவ்வேறு களம் கொண்ட தொகுதியில் மக்களை சந்தித்துப் பேசுகிறேன். போய் கும்பிடு போட்டுவிட்டு எழுந்து வருகிற அரசியல்வாதி நான் இல்லை. மக்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறேன். தீவிரமாக கவனிக்கிறேன்.
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி மீது மக்களுக்கு திருப்தி இல்லை. 3 ஆண்டு கால திமுக ஆட்சியை பாராட்டுகிறார்கள். மக்களுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை போய்ச் சேர்ந்திருக்கிறது. காலை உணவுத் திட்டம் இளம் தாய்மார்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான கனெக்ஷனை கொடுத்திருக்கிறது. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசோடு இணைந்து அதிகாரிகளும் மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு எதிரான அலை என்பதெல்லாம் பொய் பிரச்சாரம். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை பற்றியும், முந்தைய அதிமுக ஆட்சியைப் பற்றியும் பெருமையாக சொல்ல முடியாதவர்கள் திமுக ஆட்சி பற்றி பொய் பிரச்சாரத்தை பரப்புகின்றனர். சமூக ஊடகங்களில் பணம் செல்வழித்து பிரச்சாரம் செய்கின்றனர். அது களத்தில் எதிரொலிக்காது.
கேள்வி: அண்ணாமலை கோவையில் நிற்கிறார். மோடி அடிக்கடி வருகிறார். நட்டா வருகிறார். திமுகவின் 40க்கு 40 முழக்கத்தை முறியடிப்பதுதான் பாஜகவின் திட்டமோ?
ஜோதிமணி: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40க்கு 40 என்பது ஏற்கனவே முடிவான ஒன்று. அதில் விவாதிப்பதற்கே இடமில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொந்த மாவட்டத்தை விட்டுவிட்டு கோவைக்கு ஓடுகிறார் என்றால் தோல்வி பயம் தான் காரணம். மோடி மக்கள் இல்லாத சாலையில் வெறும் கையை ஆட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கிறார். பாஜகவுக்கு டெபாசிட் தேறாது என்பதை தெளிவாகச் சொல்கிறோம்.












Click it and Unblock the Notifications