ஐடி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு.. கரூரில் திமுக கவுன்சிலரை தட்டித்தூக்கிய போலீஸ்.. தொடரும் அதிரடி
கரூர்: கரூரில் வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரை சேதப்படுத்தி அதிகாரிகளை தடுத்ததாக இன்று காலை 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது கரூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை, கோவை, கரூர் மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடந்து வருகின்றன.

இதில் கரூரில் சோதனை நடத்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் நாளான நேற்று முன்தினம் கரூரில் சோதனை செய்ய அதிகாரிகளை தடுத்து நிறுத்தி திமுகவினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். ஐடி கார்டை காட்டும்படி, அவர்கள் வைத்திருந்த பையை திறந்து காட்டும்படியும் ஆக்ரோஷமாக கூறினர். அதோடு அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியை உடைத்தனர்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்பி அலுவலகம் சென்று தஞ்சமடைந்தனர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 4 அதிகாிரிகள் காயமடைந்தனர். அவர்கள் ஐசியூவில் சிகிச்சை பெற்று இன்று டிஸ்சார்ஜ் ஆகினர். இதுதொடர்பாக வருமான வரித்துறையின் அளித்த கரூர் நகர் காவல் நிலையத்தில் 3, தாந்தோணிமலையில் ஒன்று என 4 வழக்குகள் பதிவாகி இருந்தது. 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் அவர்களை தடுத்து நிறுத்திதயதாக அருண் (வயது 27), காரை சேதப்படுத்திய திமுக கரூர் மாநகராட்சி வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி மேயரின் உறவினருமான பூபேஷ் (35), ஷாஜகான் (30), சிவபிரகாசம், சின்னசாமி, ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், ரஜினி சிவா என 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி தற்போது மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உள்பட 3 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் லாரன்ஸ் என்பவர் கரூர் மாநகராட்சியின் 20வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications