மூச்சுத்திணறிய மக்கள்.. சாவியை பறித்து ஆம்புலன்ஸை உடைத்த தவெகவினர்.. கரூரில் 3 டிரைவர்கள் அட்மிட்
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கி சாவிகளை பிடுங்கி தவெகவினர் அட்டூழியம் செய்தனர். இதில் 3 டிரைவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி திடுக்கிட வைக்கும் தகவல்களை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர்.

6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 31 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
இதற்கிடையே தான் ஆம்புலன்ஸை தடுத்து டிரைவர்களிடம் தவெகவினர் வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ஆம்புலன்ஸை அடிச்சி உடைத்ததாகவும், 3 டிரைவர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கார்த்திக் என்பவர் கூறியதாவது: நாங்கள் வேலூர், வேளாங்கன்னியில் இருக்கிறவங்க. எங்களுக்கு போன் செய்து அவசரமாக வண்டி தேவை என்று கூறினார்கள். இதனால் வேகமாக கிளம்பி வந்தோம். ஆனால் எங்களிடம் சாவியை பிடுங்கி டிரைவர்களை அடித்தார்கள். 3 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அட்மிட் ஆகி உள்ளார்கள்.
ஆம்புலன்ஸ் எதற்காக சார் பயன்படுத்துகிறோம்? அவசரம் என்பதற்கு தானே சார் வருகிறோம். இங்கு உயிருக்கு போராடுகிறார்கள் என்று தான் நாங்கள் அங்கிருந்து கிளம்பி வந்தோம். ஆனால் வரும் வண்டியை எல்லாம் தடுத்து நிறுத்தி அடிச்சி உடைத்தால் என்ன செய்வது? போலீஸ் வந்து தடுக்கிறாங்க. போலீசையும் மீறி வந்து அடிச்சாங்க. 7 ஆம்புலன்ஸ் சாவியை பிடுங்கிவிட்டார்கள். எங்களால் போகவில்லை. கண்ணாடியை உடைக்கிறாங்க. சாவியை பிடுங்கினார்கள்'' என்று வருத்தத்தை தெரிவித்தார்.
அதேபோல் ஆம்புலன்ஸ் டிரைவர் மாதேஷ் என்பவர், ‛‛தவெக கட்சியில் இருக்கும் பசங்க ஆம்புலன்ஸ் உள்ளே என்ன இருக்கு என்று பார்க்கிறாங்க. பார்த்துவிட்டு உள்ளே எதுவும் இல்லை என்றால் கண்ணாடியை அடிச்சி உடைக்கிறாங்க. ஆனால் ஆம்புலன்ஸை தாண்டி அந்த புறம் பாதிக்கப்பட்டவர் இருக்கிறார். அவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் செல்கிறது என்பதை புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. டிரைவரை தாக்கி செல்போனை எடுத்து சென்றுவிட்டார்கள்.
ஆம்புலன்ஸை தாக்கியதால் ஒரு காரை பறிமுதல் செய்து போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளார்கள். அதற்கு பிறகு தான் போலீசார் தடியடி நடத்தினர். ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக தான் இங்கு வந்தோம். ஆனால் இப்படி அடிச்சி உடைச்சிட்டாங்க. 3வயது , 4 வயது குழந்தைகளை தூக்கி கொண்டு சென்றோம். குழந்தைகளை பார்க்கும்போதெ கண்ணீர் வந்தது'' என்று கலங்கினார்.












Click it and Unblock the Notifications