அடுத்த மாதம் திருமணம்! விஜய் நெரிசலில் சிக்கி பலியான ஜோடியின் கடைசி செல்பி.. கலங்கவைக்கும் போட்டோ
கரூர்: அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் நடிகர் விஜயை நேரில் பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற ஜோடி கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகி உள்ள நிலையில் இருவரும் கடைசியாக சேர்ந்து எடுத்த செல்பி போட்டோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அந்த போட்டோவில் இளைஞர் கூலிங் கிளாஸ் போட்டு தலையில் தவெக துண்டை கட்டியும், அந்த பெண் கழுத்தில் தவெக துண்டு அணிந்தும் போஸ் கொடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பி உள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகினர்.

இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் செலவையும் ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளவர்கள் கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தனர். அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் பின்னணி குறித்து அடுத்தடுத்து சோக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி திருமண நிச்சயம் முடிந்த ஜோடி இறந்துள்ளனர். கரூரை சேர்ந்த ஆகாஷ் (வயது 24) என்பவரும், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த கோகுலஸ்ரீ (வயது 24) ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. கோகுல ஸ்ரீ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். இருவரும் விஜயின் தீவிர ரசிகர்கள்.
இந்நிலையில் தான் விஜயை பார்த்துவிட்டு வருவதாக கூறி இருவரும் ஜோடியாக கரூர் சென்றனர். வீட்டு மாடியில் நின்று அவர்கள் விஜயின் பேச்சை கேட்டனர். அதன்பிறகு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தால் இருவரின் குடும்பமும் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது.
இதற்கிடையே தான் இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக ஆகாஷ் - கோகுல ஸ்ரீ ஆகியோர் சேர்ந்து ஜோடியாக செல்பி போட்டோ எடுத்துள்ளனர். அதில் ஆகாஷ் கூலிங் கிளாஸ் அணிந்து தலையில் தவெகவின் துண்டை கட்டியுள்ளார். கோகுலஸ்ரீ கழுத்தில் தவெக துண்டை போட்டு போஸ் கொடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்த இந்த போட்டோவை அவர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி உள்ளனர். தற்போது இந்த போட்டோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications