கல்வீச்சு சம்பவம் நடக்கவில்லை.. விஜய் பேசிய இடத்தை மாற்றக் கோரினோம்.. ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்!
கரூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது எங்கும் கல்வீச்சு சம்பவம் நடக்கவில்லை என்று சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் அளித்துள்ளார். தவெகவுக்கு லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அனுமதி அளிக்காததற்கான காரணத்தையும் விளக்கிய அவர், விஜய் பேசும் இடத்தை மாற்றக் கோரிக்கை வைத்த போதும் அவரது குழுவினர் ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 40 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தவெக தரப்பில் விஜய் பிரச்சாரத்தின் போது மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும், கல்வீச்சு மற்றும் செருப்பு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அதேபோல் தவெக கேட்ட இடத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்காமல், வேறு இடத்தை காவல்துறை வழங்கியதாகவும் தவெகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். இதுதொடர்பாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் செப்டம்பர் 23ஆம் தேதி லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரினர். அது மிகவும் ஆபத்தான இடம்.
ஏனென்றால் ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது. அங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது என்று தவெகவினரிடமே விளக்கினோம். இதன்பின் அவர்கள் கேட்ட உழவர் சந்தை பகுதியில் அனுமதி கோரினர். ஆனால் அது மிகவும் குறுகலான இடம்.
அதனால் தான், அண்மையில் மற்றொரு கட்சி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கூட்டி கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை பரிந்துரைத்தோம். அதனை ஏற்றுக் கொண்டு தவெகவினரும் மனு கொடுத்து அந்த இடத்தில் பரப்புரைக்கு அனுமதி பெற்றனர். அதேபோல் காவல்துறை எண்ணிக்கை குறைவாக இருந்ததா என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதாவது போலீஸ் பாதுகாப்பு அளிக்கையில் 3 வகையாக பிரிப்போம்.
அதாவது லோ-ரிஸ்க், கொஞ்சம் ரிஸ்க், அதிக ரிஸ்க் என்று 3 வகையாக பிரிப்போம். லோ ரிஸ்க் கூட்டம் என்றால், 250 மக்களுக்கு ஒரு போலீஸ்காரர் என்ற வகையில் பாதுகாப்பு அளிப்போம். லேசான ரிஸ்க் என்றால் 150 பேருக்கு ஒரு போலீஸார் என்ற நிலையில் பாதுகாப்பு அளிப்போம். அதிக ரிஸ்க் என்றால் 50 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற வகையில் பாதுகாப்பு அளிப்போம்.
தவெக கூட்டத்திற்கு மொத்தமாக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கண்காணிப்பாளர், 3 ஏடிஎஸ்பி, 4 டிஸ்பி, 17 காவல் ஆய்வாளர், 57 துணை காவல் ஆய்வாளர் என்று 500 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். திருச்சியில் அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு எண்ணிக்கை 650 ஆகும். அரியலூர் மாவட்டத்தில் 287 போலீஸாரும், பெரம்பலூரில் 480 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் நாகையில் 410 போலீஸாரும், திருவாரூரில் 413 போலீஸாரும், நாமக்கல்லில் 279 பேரும், கரூரில் 500 பேரும் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் எங்கிருந்து வந்தது என்று கேட்கிறார்கள். தவெக தரப்பில் 2 ஆம்புலன்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதன்பின் போலீசார் கொடுத்த தகவலின்படியே ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.
கல்வீச்சு சம்பவம் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் விஜய் பரப்புரையின் போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. தவெக தலைவர் விஜய் கரூர் ரவுண்டானா வருவதற்கு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. நாமக்கல்லிலேயே தாமதம் ஏற்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டத்திற்கு வரும் போது 6 மணியாகிவிட்டது. விஜய் கண்ணாடி திரையை இறக்கியதால், விஜய்யை பார்க்க மக்கள் ஆர்வமாகிவிட்டனர். அவருடன் செல்ல தொடங்கிவிட்டார்கள்.
இதனால் இரு பக்கங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் வந்துள்ளது. காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் இருந்து அழைத்து வரவே முடியவில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால், அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு தேவை. கரூர் டிஎஸ்பி தான் விஜய் குழுவுடன் பேசி அழைத்து வந்துள்ளார். விஜய் பேசும் இடத்தை மாற்றக் கோரிய போதும், அவர்கள் ஏற்கவில்லை.
அதனால் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி தான் விஜய்யை அழைத்து வந்தோம். பொதுமக்கள் பலரிடம் பேசும் போது, 12 மணிக்கு எல்லாம் இந்த இடத்திற்கு வந்துவிட்டோம் என்கிறார்கள். பலரும் காலை உணவு கூட சாப்பிடாமல் வந்துள்ளனர். மதியம் சாப்பிடாமல் நின்றிருக்கிறார்கள். சாப்பாடு, தண்ணீர் வசதி இல்லாமல் காத்திருந்துள்ளார்கள். இதனை விசாரணை நடத்தியே முழுமையாக கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications