என் தம்பி விஜய்க்கும்.. தவெக பிள்ளைகளுக்கும்.. கரூர் மருத்துவமனையில் இருந்து சீமான் சொன்ன ஆறுதல்
கரூர்: ‛‛கரூரில் நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆறுதல். தமிழக வெற்றிக் கழகத்தின் பிள்ளைகள், முதன்மை பொறுப்பாளர்கள், என்னுடைய தம்பி விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆறுதலை சொல்லி கொள்கிறேன். இது துயரம் தான். ஆனால் இதில் இருந்து மீண்டும் வர வேண்டும்'' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலங்கியபடி கூறினார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது 9 சிறுவர் - சிறுவர்கள், 19 பெண்கள் உள்பட மொத்தம் 39 பேர் பலியாகினர்.

இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. இது ஒரு படிப்பினை. இப்படியான பெருந்துயரம் இனி நடக்காமல் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. மொத்தமாக இந்த நிகழ்ச்சி துயர நிகழ்வு உலகம் எங்கும் இருக்கும் எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. என்னடா இப்படி ஆயிடுச்சே என்று தான் சொல்ல வைத்தது.
உறவுகளை இழந்தவர்கள் இதில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். காயம்பட்டவர்கள் விரைவில் குணமாகி வர வேண்டும். மருத்துவர்கள் நம்பிக்கையாக சொல்றாங்க. விரைவில் குணமாகி விடுவார்கள் என்கின்றனர். இது சற்று ஆறுதலாக இருக்கிறது. பிள்ளைகளை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆறுதல்.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பிள்ளைகள், முதன்மை பொறுப்பாளர்கள்.. என்னுடைய தம்பி விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆறுதலை சொல்லி கொள்கிறேன். இது துயரம் தான். இதில் இருந்து மீண்டும் வர வேண்டும். அதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும். வருங்காலத்தில் இத்தகைய பேரிடர் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications