தண்ணீர் பாட்டில் இருந்ததா?, பிஸ்கட் பாக்கெட் இருந்ததா?.. குறை சொல்ல விரும்பவில்லை.. செந்தில் பாலாஜி
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் கொடுமையானது, பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி எக்காரணம் கொண்டும் இதுபோன்ற சம்பவம் எந்த ஊரிலும் நடந்துவிட கூடாது என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கரூர் துயர நிகழ்வை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. இதை குறையாக சொல்லவில்லை. தவெக கூட்டத்தில் எங்கேயாவது தண்ணீர் பாட்டில் இருந்ததா? ஒரு பிஸ்கட் பாக்கெட்களாவது இருந்ததா என்றும் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் திமுக அலுவலகத்தில் இன்று செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தண்ணீர் பாட்டில் இருந்ததா?
கரூரில் நடந்த சம்பவம் யாராலும், எந்த சூழ்நிலையாலும் நினைத்து பார்க்க முடியாத துயர சம்பவம். இனி இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கும், எக்காரணம் கொண்டும் நடந்துவிடக் கூடாது. கரூர் துயர நிகழ்வை அரசியலாக பார்க்க விரும்பவில்லை.
எதையும் நான் குறை சொல்லவில்லை. வரும் நாட்களில் இது போன்று நடந்துவிட கூடாது என்று தான் சொல்கிறோம்.. தவெக கூட்டத்தில் எங்கேயாவது தண்ணீர் பாட்டில் இருந்ததா? ஒரு பிஸ்கட் பாக்கெட்களாவது இருந்ததா? காலையில் இருந்து அவர்கள் நிற்கும் போது நீங்களே சொல்லுங்கள்.. குறித்த நேரத்தில் வந்திருந்தால் இந்த பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.
குறையாக சொல்ல விரும்பவில்லை
மறுநாள் அந்த இடத்தில் பார்த்தால், ஆயிரம் இரண்டாயிரம் செருப்புகள் கிடந்திருக்கும். ஆனால் ஒரு இடத்தில் கூட எம்ப்டியான தண்ணீர் பாட்டில்கள் கிடந்ததா? எல்லாரும் பார்த்து இருப்பார்கள். குடிநீர் பாட்டில்கள் கூட கொடுக்கவில்லை. அவர்கள் மக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும். நான் குறையாக சொல்லவில்லை. எந்த அரசியல் கட்சிகளும் இதை ஒரு குறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு கட்சி இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
குறுகலான இடத்தை கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கேட்ட மற்ற இரண்டு இடங்களும் இதைவிட சிறியது. எங்கு அதிகமான நபர்கள் நிற்க முடியும் எங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதை பார்த்து தான் கொடுக்க முடியும். லைட் ஹவுஸ் பகுதி என்றால் அங்கு பெட்ரோல் பல்க் இருக்கிறது, அருகில் ஆறு இருக்கிறது.
வேலுசாமிபுரம் ஏன்?
அதுமட்டும் இல்லாமல் அங்கு வெறும் 7,000 பேர் தான் நிற்க முடியும். உழவர் சந்தை என்று எடுத்துக்கொண்டால் அங்கு 5000 பேர் தான் கூட முடியும். அங்கு இருக்கைகள் போட்டாலே 2 ஆயிரம் சேர்கள் தான் போட முடியும். எனவே எவ்வளவு பேர் வருவாங்க என்பதை பார்த்து அதற்கு ஏற்ற இடத்தை அவர்கள் தான் கேட்க வேண்டும்.
எனவே தான் வேலுசாமிபுரத்தை கொடுத்தோம்.. நாங்கள் முப்பெரும் விழா நடத்திய போது 2 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அங்கு இரண்டரை லட்சம் பேர் வந்தார்கள். இருந்தாலும் ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருந்தது.
குறித்த நேரத்தில் முடித்திருந்தாலும் இது போன்று நடந்திருக்காது என பலரும் கருத்து சொல்கிறார்கள். இனி வரும் நாட்களிலாவது இது போன்று நடக்காத வண்ணம் அரசியல் கட்சிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications