"ஆடு உள்ளே வரும்.. வெளியே போக முடியாது" கரூரில் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த செந்தில் பாலாஜி!
கரூர்: ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரித் காலம் என்றும், ஒரேயொரு ஆட்டினை கொத்து கறி போட்டால் அது தேர்தல் காலம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். பள்ளப்பட்டிக்கு எத்தனை ஆடுகள் வந்தாலும் உள்ளேயும் வர முடியாது, அப்படி வந்தால் வெளியேவும் போக முடியாது என்றும் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என்றும், அண்ணாமலையை ஆடு என்றும் மாற்றி மாற்றி அழைத்து காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை திமுக தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இஸ்லாமியர் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி பேசுகையில், ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்தி குர்பானி கொடுத்தால், அது பக்ரித் காலம். ஒரே ஆட்டை அறுத்து கொத்து கறி போட்டால், அது தேர்தல் காலம்.
ஒரு ஆடு அல்ல.. எத்தனைகள் ஆடுகள் வந்தாலும் சரி.. பள்ளப்பட்டிக்கு உள்ளேயும் வர முடியாது.. உள்ளே வந்தால் வெளியேவும் போக முடியாது.. இதனை கடந்த தேர்தல்களில் நிரூபித்து காட்டியுள்ளீர்கள். வரக் கூடிய காலத்தில் அதனை தொடர வேண்டும். உங்களில் நானும் ஒருவன். தொகுதி பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகள் வரும்.
10 கோரிக்கைகள் வந்தால், அதில் 2 பள்ளப்பட்டியைச் சார்ந்ததாக இருக்கும். அதனை ஒருபோதும் நிறைவேற்ற யோசித்ததில்லை என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையை மறைமுகமாக செந்தில் பாலாஜி கிண்டல் செய்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூட, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.
மது விலக்கு தொடர்பான அண்ணாமலையின் முரண்பாடான பேச்சுகள் தனது செல்ஃபோனில் இருப்பதாக கூறிய செந்தில் பாலாஜி, அரசு நிகழ்ச்சிகளில் சில கோமாளிகள் குறித்து கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் கூறினார். இதனால் வரும் நாட்களில் அண்ணாமலை - செந்தில் பாலாஜி இடையிலான வார்த்தை மோதல் உச்சத்தில் இருக்கும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications