"பெரிய ஆபத்து!" மின்சார சட்ட திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு சிக்கல்! செந்தில்பாலாஜி பரபர
கரூர்: மத்திய அரசு முன்மொழிந்த மின்சார சட்டத் திருத்த மசோதா குறித்து தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மாநிலம் முழுக்க போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அங்கு +1 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் போதைப் பொருள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "போதைப் பொருள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் கண்டிப்பான உத்தரவுகளை வழங்கி உள்ளார்

முதல்வர் நடவடிக்கை
மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாகவே போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதைப் பொருள் ஒழிப்பை இதுவரை இல்லாத வகையில் ஒரு இயக்கமாகவே முதல்வர் முன்னெடுத்துள்ளார். போதைப் பொருள் இல்லாத சிறப்பான ஒரு மாநிலமான தமிழகத்தை முதல்வர் நிச்சயம் உருவாக்குவார்.

திமுக எதிர்ப்பு
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மின்சார திருத்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது. அப்போது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே மின்சார திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டு உள்ளது.

இலவச மின்சாரத்திற்கு ஆபத்து
இந்த மசோதா மட்டும் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயம், விசைத்தறி, குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. மேலும், பல்வேறு கடன்கள், மக்கள் பங்களிப்புடன் நீண்ட கால முயற்சிக்குப் பின் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் உருவாக்கப்பட்ட மின் கட்டமைப்புகளை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் சூழல் உருவாகும்.

ஏழை மக்கள்
மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் நுகர்வோருக்கும், தொழிற்துறை நிறுவனங்களுக்கும் மட்டும் தனியார்த் துறையினர் மின்சாரத்தை வழங்குவார்கள். குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்கத் தனியார்த் துறை பெரிய நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள். எனவே, இந்த புதிய மசோதா நாம் இத்தனை ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்டமைப்பைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சூழலை உருவாக்கும்.

முதல்வர் அழுத்தம்
இது தொடர்பாகப் பிரதமருக்கும் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்கள். மேலும், நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவைத் திரும்பப் பெறும் வரை முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார். காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் இருக்கும் உபரி நீரைக் கரூர் மாவட்டத்தில் உள்ள குளங்களுக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications