தவெகவினர் மீது போலீசார் தடியடி நடத்தவில்லை.. கரூர் கூட்ட நெரிசலில் என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. என்னென்ன குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதோ அவை அனைத்திற்கும் ஒவ்வொன்றாக வீடியோவை தமிழக அரசு வெளியிட்டது. குறிப்பாக கூட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் அதற்கும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கரூர் கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தவில்லை என்று ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வீடியோ வெளியிட்ட விஜய்
கரூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தவெக மாவட்ட நிர்வாகிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். கரூர் துயர சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும் கூட இன்னமும் ஒரு தவெக நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க விஜய் தாமதமாக வந்ததாலேயே இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் பலரும் விஜய் மீது குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.
திமுக எம்பி ஆ ராசா கூட விஜய் ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்றும் குற்ற உணர்ச்சி இருப்பதால் தான் சென்னைக்கு சென்றுவிட்டார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் சம்பவம் தெரிந்து 3 நாட்களுக்கு பின்னர் விஜய் இன்று மதியம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தான் நேரம் கடந்து வந்ததால் தான் இப்படி ஆகிவிட்டது என்று சொல்லவே இல்லை.. மாறாக இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கூட கேட்கவில்லை.
தடியடி நடத்தவில்லை என போலீஸ் விளக்கம்
ஆனால் தமிழக அரசு மீது குற்றம் சாட்டி பேசுகிறார். சிஎம் சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் என் தொண்டர்களை எதுவும் செய்யாதீர்கள் என்று பேசுகிறார். தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் எந்த அரசியலும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருந்த நிலையில் விஜய்யே இப்படி பேசியிருக்கிறார். அதுபோக தவெகவினர் சிலர் கூட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதாக அவதூறு பரப்பி வந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் எப்படி நடந்தது என்பது குறித்து வீடியோக்கள் வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தடியடி நடத்தினார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அவரது வாகனம் உள்ளே வந்தார். 6 மணி போல் அவரது வாகனம் உள்ளே வருது. ஆனால் ஏற்கனவே அங்கு கூட்டம் அதிகளவு இருந்தது.
போலீசார் விலக்கி தான் விட்டனர்
குறிப்பிட்ட இடத்துக்கு வரும் போது அவரது வாகனம் முன்னேறி செல்ல முடியவில்லை. அங்கேயே ஏற்கனவே கூட்டம் இருந்த நிலையில் விஜய்யின் வாகனத்தோடும் நிறைய பேர் வந்துவிட்டார்கள். அப்போது தான் போலீசார் வாகனத்தை முன்னே செல்ல வைப்பதற்காக தொண்டர்களை விலக்கி விட்டார்கள். விஜய் பேசும் இடம் அருகே வரும்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது. அப்போது போலீசார் விலக்கி தான் விட்டனர். தடியடி நடத்தவில்லை.
பிறகு வீடியோ ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதில் போலீசார் விலக்கி விட்டது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தன. சில போலீசார் மயங்கிய தொண்டர்களுக்கு கைக்குட்டையால் காற்று வீசி விட்டது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.












Click it and Unblock the Notifications