அதிக வசூல்.. டாஸ்மாக் வருமானத்தை பாராட்டி சான்று வழங்கிய கலெக்டர்.. கரூரில் வெடித்த சர்ச்சை
குடியரசு தினவிழாவில் கரூரில் டாஸ்மாக் வருமானத்தை பாராட்டி பணியாளர்களுக்கு கலெக்டர் சான்று வழங்கியது சர்ச்சைை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்: கரூரில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இந்த வேளையில அதிக வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறி டாஸ்மாக் ஊழியர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கிய சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஒவ்வொரு குடியரசு தினவிழாவின்போதும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் துறைவாரியாக பாராட்டு சான்று, கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று நாட்டின் 74வது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.

பாராட்டு சான்றிதழ்
மேலும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். அதன்பிறகு துறைவாரியாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கப்பட்டது. கரூர் மாவட்டத்திலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கரூரில் கொண்டாட்டம்
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழை கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். இந்த வேளையில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டதை பாராட்டி இவை வழங்கப்பட்டுள்ளன.

சர்ச்சை-எதிர்ப்பு
இதுதொடர்பான சான்று சமூக வலைத்தளத்தில் விவாத பொருளாகி உள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மீம்கள் உருவாக்கப்பட்டன. டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் அதிக வருவாய் ஈட்டியதாக பராட்டு சான்று வழங்கி இருப்பது கண்டனத்துக்குரியது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications