கரூர் தனியார் பள்ளி பயிலும் அக்கா, தங்கை மற்றும் அம்மா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த கூட்ட நெரிசல் விபத்தில் கரூர் தனியார் பள்ளி பயிலும் அக்கா, தங்கை மற்றும் அம்மா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தான்தோன்றி மலையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணி அளவில் கரூரில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, சிலர் மயக்கமடையத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அவர் பிரச்சாரம் முடித்துக் கொண்டு புறப்பட்ட பிறகு, பலர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. . கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே 36 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பல ஆம்புலன்ஸ் வாகனங்களில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஹேமலதா என்ற தாயும், கரூர் தனியார் பள்ளி பயிலும் அவரது குழந்தைகளான சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோரும் உயிரிழந்தனர். அதாவது கரூர் தனியார் பள்ளி பயிலும் அக்கா, தங்கை மற்றும் அம்மா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பிரச்சாரம் நடந்த இடத்தில் பொதுமக்கள் அணிந்து வந்த ஆயிரக்கணக்கான செருப்புகள், துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சிதறிக்கிடந்தது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைத்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications