கோபேக் ராகுல்.. குமரியில் இந்துக்கள் சிறுபான்மை! கிறிஸ்தவ மிஷனரி நிதி -அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு
கரூர்: ஒற்றுமை பயணத்தை தொடங்க தமிழ்நாடு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் ராகுல் கோ பேக் என முழக்கமிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இன்று அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஊர்வலம் புறப்பட்டு சென்றது.
கோவை சாலை, ஜவஹர் பஜார், 5 ரோடு வழியாக வாங்கல் காவிரி ஆற்றுக்கு சிலை கொண்டு செல்லப்பட்டது. இதில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் பொதுவானவர். திமுக தலைவராக இருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் செல்ல தேவையில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். இந்துக்களை முதல்வர் புறக்கணிக்கிறார். இது கண்டிக்கதக்கது. இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

காவிரி நீர்
இந்துக்கள் புறக்கணிக்கப்படுவதுடன், கைது செய்யப்படுகிறார்கள். காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அகண்ட காவிரியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அவை சேமிக்கப்படாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும்.

டெல்லி முதலமைச்சர்
அரசு நிவாரணப் பணிகளை செயல்படுத்த வேண்டும். வெள்ள நீரை நீர் நிலைகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்து தமிழகத்தில் அரசு மாடல் பள்ளிகளை திறக்க வைக்கின்றனர். டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் மும்மொழி கொள்கை, நவோதயா பள்ளிகள், புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைபடுத்தி வருகிறார்.

நவோதயா பள்ளிகள்
ஆனால், தமிழகத்தில் இதை எதையும் அனுமதிப்பதில்லை. தமிழக அரசு தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தமிழக அரசு இருடடிப்பு செய்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இந்த அரசு அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றார்.

கோ பேக் ராகுல்
மேலும், தமிழகத்திற்கு ராகுல் காந்தி வருகை தர உள்ளார். சிறுபான்மையாக இந்துக்கள் உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அங்குள்ள கிறிஸ்தவ மஷனரிகள் வெளிநாடுகளில் இருந்து நிதிகளை பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராகுல் காந்தியின் காங்கிரஸ் இந்திய காந்தியின் காங்கிரஸ் அல்ல, சோனியா காந்தி காங்கிரஸ். பொதுமக்களை ஏமாற்ற இங்கு வருகை தருகிறார். ராகுல் கோபேக் என்ற முழக்கத்துடன் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications