ஐடி ரெய்டில் அதிகாரிகள் தடுக்கப்பட்டார்களா? உண்மையில் நடந்தது இதுதான்! செந்தில் பாலாஜி பரபர விளக்கம்
கரூர்: கரூர் ஐடி ரெய்டில் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி ஐடி கார்டு கேட்டதோடு, கார்களை சேதப்படுத்தினர். இந்நிலையில் தான் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. நேற்று முதல் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூரில் இந்த சோதனை நடந்து வருகிறது. இன்று 2வது நாளாக வருமான வரி சோதனை நடக்கிறது.

குறிப்பாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரி அதிகாரிகளை திமுகவினர் தடுத்து நிறுத்தி பையை திறந்து காட்ட கூறியதோடு, ஐடி கார்டையும் கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் கார் சேதப்படுத்தப்பட்டது. அதோடு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் போலீஸ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் திமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுகவினர் அளித்த புகாரில் வருமான வரித்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செந்தில் பாலாஜி கூறியதாவது: சென்னையில் என் இல்லத்தை தவிர சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வருமான வரி சோதனையை பொறுத்தமட்டில் முழுவிபரங்களை தெரிந்து கொண்டு வெளியிட வேண்டும். செவிவழி செய்திகள் வெளியிடும்போது அது உண்மை என பொதுமக்கள் நம்பி விடுகின்றனர்.

இதனால் உண்மை நிலை என்ன? எத்தனை இடங்களில் சோதனை நடக்கிறது? என்பது தெரியாமல் போய்விடும். நான் பள்ளி பயிலும் காலத்திலேயே தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் வருமான வரி செலுத்தி வருகின்றனர். வரிஏய்ப்பு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். வரி ஏய்ப்புக்கான வரியை செலுத்த அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.
வருமான வரி சோதனை ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு சட்டசபை தேர்தல் நடந்தபோது சோதனை நடந்தது. சோதனைக்கு பிறகு என்ன முடிவு வந்தது?. தேர்தல் சமயத்தில் இதுபோன்ற சூழல்களை முன்னெடுக்கின்றனர். இன்னும் இரண்டொரு நாட்களில் சோதனை முடிவுக்கு வரும் என சொல்கிறார்கள். முழுவதுமாக முடிவடைந்த பிறகு நான் விளக்கம் அளிக்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் என சொல்லவே தகுதி இல்லாதவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. வருமான வரி சோதனை பற்றி தகவல் இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளதை விமர்சித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காமெடி சேனல்களில் வரும் கதாபாத்திரம் போல் காமெடி செய்து வருகிறார். அமைச்சராக இருந்து கொண்டு சொந்த தொகுதியிலேயே ஜெயிக்க முடியாதவர் தான் அவர்.
தூங்கும் வீட்டில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து திடீரென யாராவது உள்ளே வந்தால் பதற்றம் வரும் தானே. அது இங்கும் நடந்தது. மேலும் போலீஸ், மத்திய அரசின் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் பாதுகாப்பு படையினர் இன்றி வருமான வரித்துறையினர் எனக்கூறி வீட்டுக்குள் நுழைய முயன்றதால் அடையாள அட்டை காட்டும்படி நிர்வாகிகள் கூறினார்கள்.
மேலும் பொருட்கள் நிரப்பப்பட்ட 2 பைகள் இருந்ததால் கேள்வி கேட்டனர். இதற்கு விளக்கம் அளித்திருக்க வேண்டும். இருப்பினும் சில விரும்பதகாத அசம்பாவிதங்கள் நடந்துவிட்டது. இந்த சோதனை முடிய முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். இதுபோல் 100, 1000 சோதனைகள் நடத்தினாலும் அச்சமில்லை. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்'' என்றார்.












Click it and Unblock the Notifications