மலர் வளர்ப்புக்கு 14 லட்சம் மானியம்! - ஸ்டாலின் திட்டத்தால் மாஸ் காட்டும் கிருஷ்ணகிரி
விவசாயமே வேண்டாம் என்றிருந்த கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முகத்தில் தனது திட்டத்தின் மூலம் மகிழ்ச்சியை உண்டாக்கியவர் முதல்வர் ஸ்டாலின்
கிருஷ்ணகிரி: விவசாயமே வேண்டாம் என வேதனையில் தவித்த கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முகத்தில் முழு மகிழ்ச்சியை உண்டாக்கித் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அதற்குத் திருப்புமுனையாக இருந்துள்ளது. பலவகைகளில் பலன்பெற்றுள்ள அந்த மக்களின் முன்னேற்றத்தை முறையாக முன்வைக்கிறது இந்தக் கட்டுரை. ஆடு, மாடு வளர்ப்புக்கு அரசு தரும் மானியம்:
கிருஷ்ணகிரி மாவட்டம். மத்தூர் வட்டாரம், சாமல்பட்டி பஞ்சாயத்து சேர்ந்தவர் வெங்கடேசன். பல தலைமுறைகளாகவே இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். ஆனால் அதை மட்டுமே கொண்டு போதுமான வருமானத்தை ஈட்ட முடியவில்லை. ஆகவே மேற்கொண்டு ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் மூலம் வேறு சில தொழிலையும் சேர்த்துச் செய்ய விரும்பினார். அதற்காகத் திட்ட இயக்குநரைச் சென்று அணுகியுள்ளார்.
"தகுதியான விவசாயிகளுக்கு மட்டும்தான் இந்தத் திட்டத்தில் அனுமதி அளிக்கமுடியும். எல்லா விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் வாய்ப்பு தர முடியாது என்று முதல் சந்திப்பிலேயே இயக்குநர் மிகக் கறாராகக் கூறினார். அவரிடம் நான் தகுதியான பயனாளிதான் என்பதற்கான எல்லா ஆதாரங்களைக் கொண்டுபோய் சமர்ப்பித்தேன். அதன்பின் பரிசீலனை செய்து, அரசாங்கம் நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இன்று நல்ல வருமானம் கிடைக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் அதற்கு முழுக் காரணம்" என்கிறார் வெங்கடேசன்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருபவர் நீலகண்டன். இவர் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார். இத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதை ஊக்குவித்து, தன்னிறைவு கிராமமாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதன் ஒரு பகுதியாகத்தான் சாமல்பட்டி கனிச்சி கிராமத்தை இக்குழு தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறது.
இந்தக் கிராமத்தில் ஆடு, மாடு வளர்ப்பு பணிகள் குறைந்து வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஆனால் முன்பு ஒரு காலத்தில் நல்ல அளவில் பங்களிப்பு செய்து வந்த கிராமம். ஏன் இந்தளவுக்கு ஆடு,மாடு வளர்ப்பு குறைந்து போனது என்பதை அறிவதற்காகக் களத்தில் இறங்கினோம். முன்பு போலவே ஆடு, மாடு வளர்ப்பில் இக்கிராமத்தைச் செயல்பட வைக்க முடிவு செய்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுத்தோம்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு பயனாளி பலன்பெற வேண்டும் என்றால் அவருக்கு இரண்டரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதைப்போல இவர் ஆடு,மாடு போன்ற வளர்ப்பில் ஈடுபட்டு வரக் கூடாது என்பது விதி. நாங்கள் வெங்கடேசனின் சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை வாங்கி பரிசோதித்த போது, இதற்குத் தகுதியானவர் அவர் என்பதை அறிந்தோம். அவர் முன்பே கால்நடை வளர்ப்பில் ஈடுபடவில்லை என்பதையும் உறுதி செய்தோம்.

மானாவாரி விவசாயத்தை மலையேற்றி வைத்த திட்டம்:
வெறும் கால்நடை வளர்ப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாங்கள் குறிப்பிடும் பயிர் வகையையும் நீங்கள் சாகுபடி செய்ய வேண்டும் எனச் சொன்னோம். அதற்கும் பயனாளி சம்மதம் தெரிவித்தார். உடனே அவருக்குத் தேவையான நிதியைத் திட்டத்தின் மூலம் பெற்றுத் தந்துள்ளோம்" என்கிறார். வெங்கடேசன் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் இப்போது ஆடு, மாடு, கோழி எனப் பல கால்நடைகளை வாங்கி பயன்பெற்றுள்ளார். கறவை மாடு வாங்குவதற்காக ரூபாய் 50 ஆயிரம் பெற்றுள்ளார். மானியமாக 15 ஆயிரம் ரூபாய் அரசு வழங்கியுள்ளது. அதேபோல் ஆடு வாங்குவதற்காக 65 ஆயிரம் பெற்றுள்ளார். அதற்கு மானியமாக 15 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். மேலும் கோழி வளர்ப்புக்காக 6,500 ரூபாய் வாங்கியதில் மானியமாக ரூபாய் 3 ஆயிரம் கிடைத்துள்ளது.
இவைபோக இந்தக் கால்நடைகளின் கழிவைக் கொண்டு மண்புழு உரம் தயாரிப்பதற்கான உபகரணங்களை அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக உரத்தை இவர் வெளியே இருந்து பெறுவதில்லை. தனது சொந்த தயாரிப்பின் மூலமே தன்னிறைவு அடைந்துள்ளார். அதுவே கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கம். அந்தளவில் அதைச் சரியான பயன்படுத்திக் கொண்டுள்ளார் வெங்கடேசன்.
இக்கிராமத்தில் National Mission for Sustainable Agriculture, Rainfed Area Development , Integrated Farming System ஆகிய மூன்று விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒருங்கிணைந்த விவசாய முறை (ஐஎஃப்எஸ்) திட்டம் மூலம் மட்டும் மாவட்ட அளவில் 100 யூனிட் செயல்பட்டு வருகிறது. இதனால் 100 விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
மாடு வளர்ப்புக்காகத் தீவன சோள விதைகள் வழங்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு பயனாளிக்கும் மா, பலா,சப்போட்டா போன்ற 35 வகையான பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன. தேன் உற்பத்தி செய்வதற்காக 2 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தேன் எடுத்து வியாபாரம் செய்துகொள்கிறார். இதற்கும் அரசு 6 ஆயிரம் வரை மானியம் வழங்குகிறது. வெங்கடேசன் மாடு வாங்குவதற்காக அரசே எனக்குப் பொருளாதார உதவி செய்து கொடுத்ததுடன், அரசு கால்நடை மருத்துவர் மாட்டின் ஆரோக்கியத்தை நேரடியாகச் சந்தைக்கு வந்து மருத்துவச் சோதனை செய்து பார்த்து தரமான வாங்க உதவி செய்துள்ளார். அதே மாதிரி மற்ற கால்நடைகளை வாங்குவதற்கும் அரசு மருத்துவர் உதவி செய்துள்ளார். வளர்ப்பு குறித்த ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.
ஒருங்கிணைந்த விவசாயத்தில் ஒரு விவசாயி, பலதுறைகளைச் சேர்த்துக் கவனிக்க வேண்டும். ஆடு, மாடு வளர்ப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தேனீ வளர்ப்பு, உரத் தயாரிப்பு ஆகியவற்றுக்கு முன் அனுபவம் தேவை. அதற்கான செயல்முறை அனுபவத்தை அரசு சார்ந்த வேளாண் அதிகாரிகள் பாடமுறையை சொல்லித் தந்து வருகிறார்கள். விவசாயிகள் தங்களின் விற்பனையை வேளாண்துறை மூலமாகவே மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுச் சந்தையைவிட இச்சந்தையின் மூலம் விற்பனை செய்தால் கூடுதல் வருமானம் ஏற்படுத்தியும் தரப்பட்டுள்ளது. ஆக, அனைத்தும் இத்திட்டத்தின் மூலம் 50% மானியத்தின் அடிப்படையில் கிடைக்கிறது என்பது சிறப்பு இல்லையா? இவர் வளர்க்கும் மாடுகள் மூலம் தினம் பால் உற்பத்தி செய்கிறார்.
அதில் செலவுகள் போக 300 ரூபாய் இலாபம் கிடைத்து வருகிறது. தேன் எடுப்பு மூலம் மாதம் சுமார் 200 முதல் 300 வரை இலாபம் ஈட்ட முடியும். ஆடுகள் வளர்ப்பில் உடனடியாக வருமான இன்னும் கிடைக்கவில்லை. ஏனெனில் ஆடுகள் இப்போதுதான் குட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. வரும் காலத்தில் அதன் மூலம் பெருந்தொகை இலாபம் ஈட்ட முடியும் என்பது உறுதி. இதற்கு முன்பாக இக்கிராம மக்கள் எள், கொள், தட்டப்பயிர், உளுந்து போன்ற மானவாரி பயிர்களைத்தான் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் இப்போது வேளாண்துறை மூலம் சில புதிய பயிர்களைச் சாகுபடி செய்ய ஆரம்பித்துள்ளார். வெறும் மானாவாரி பயிர்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்துவந்ததால் சரியான வருமானம் இல்லாமல் தவித்து வந்தார். ஆனால், இப்போது இவர் கலைஞரின் ஒருங்கிணைந்த விவசாய திட்டத்தால் மாபெரும் பலனை ஆண்டு முழுவதும் வருமானம் பெறும்படி மாற்றிக் கொண்டுள்ளார். மானவாரி என்பது ஆண்டு முழுவதும் வருமானத்தைத் தராது.

ஸ்டாலின் உருவாக்கித் தந்துள்ள மாபெரும் திட்டத்திற்கு நன்றி:
"மழை அதிகமாக வந்தாலும் விவசாயி நஷ்டம் அடைகிறார். மழை குறைவாக வந்தாலும் விவசாயி நஷ்டம் அடைகிறார். எந்த வகையிலும் நஷ்டம் விவசாயிக்கானதாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது ஒரு சிறப்பான திட்டம். ஒருவிவசாயி ஆண்டு முழுவதும் ஒரே பயிரை நம்பி வாழத் தேவையில்லை. தன்னிடம் உள்ள விளைநிலத்தைப் பிரித்து பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு பக்கம் ஆடு,மாடு வளர்ப்பு என்றும் மற்றொரு பக்கம் தேனீ, கோழிகள் வளர்ப்பு என்று பன்முகத்தன்மையைக் காட்டலாம். இவ்வாறு ஆண்டு முழுக்க பல பகுதிகளிலிருந்து இடைவிடாமல் சீரான வருமானம் கிடைக்கும். ஆடு வளர்ப்பு ஆண்டு வருமானமாகவும் பால் உற்பத்தி தின வருமானமாகவும், தேனி வளர்ப்பு மாத வருமானமாகவும் தனித்தனியாகவும் பகுதிப்பகுதியாக கிடைக்கும்.
பல்வேறு வகைகளில் நலிந்துவரும் வேளாண் மக்களைக் காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை எங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திக் கொடுத்தமைக்காக ஸ்டாலினுக்கு என் தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன். இந்த ஒருங்கிணைந்த பண்ணை முறையின் மூலம் பலர் புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளனர். மலர் சாகுபடியில் இறங்கி சர்வதேச அளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேற்கொண்டு அது எப்படிச் சாத்தியமானது என்பதற்கு சில சாட்சிகளைச் சந்தித்தோம்.

ட்ராகன் சாகுபடி செய்ய 96 ஆயிரம் ரூபாய் மானியம்:
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பண்ணையில் துணை இயக்குநராக பணிபுரிந்துவருகிறார் ராம் பிரசாத். "எங்கள் மாவட்டம் விவசாயத்தை நம்பி இருக்கின்ற மாவட்டம். இங்குத் தோட்டக்கலை சார்ந்த பூ மற்றும் பழ வகைகள் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. பழவகையில் ட்ராகன் ஃபுரூட்ஸ் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் ட்ராகன் சாகுபடி செய்ய 96 ஆயிரம் ரூபாயை அரசு தருகிறது. அதேபோல மலர் வகைகள் சாகுபடிக்கும் பணம் தருகிறார்கள். மலர் வளர்ப்புக்காகப் பசுமைக் குடில் அமைக்க ஒரு சதுர பரப்பளவுக்கு 450ரூபாய் அரசு வழங்குகிறது. இதன் மூலம் நிறை கொய் மலர்கள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்" என்கிறார்.
விவசாயி திருப்பதி, "20 வருடங்களுக்கு முன்னால் முட்டைக் கோஸ், தக்காளி சாகுபடி செய்து வந்தோம். மழை வந்தாலும் நஷ்டம் வரும். வெயில் வந்தாலும் நஷ்டம் வரும். தினம் ஒரு விலையாக இருக்கும். வீழ்ச்சியும் வரும். இலாபமும் வரும். ஆனால் நம்பி நிலையான வருமானத்தைப் பெற முடியாது. சந்தை நிலவரம் பொறுத்து எல்லாம் மாறும். ஆகவே விவசாயம் செய்யவே தயக்கமாக இருந்தது.
இப்போது பழைய விவசாயத்தினை கைவிட்டுவிட்டோம். புதியதாக மலர் சாகுபடியில் இறங்கியுள்ளோம். பசுமைக் குடில் அமைத்து மலர் சாகுபடி நடக்கிறது.
மேலும் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து மலர்களைப் பதப்படுத்தி வைப்போம். சந்தை நிலவரம் பார்த்து அதற்கு தக்கபடி விற்பனைக்கு அனுப்புவோம். மலர்கள் வாடாமல் இருக்க இந்தக் குளிரூட்டும் அறையை அரசே உருவாக்கித் தந்துள்ளது. எங்களது மலர்கள் இந்தியச் சந்தையை அடுத்து வெளிநாட்டுச் சந்தைக்கும் ஏற்றுமதி ஆகின்றன. நிலையான வருமானமும் கிடைக்கிறது" என்கிறார்
இவருக்குக் குடில் அமைக்க 35 லட்சத்தை அரசு வழங்கியுள்ளது. அதில் 14 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழிலில் நம்பிக்கையோடு இறங்கிய இவர் இன்று இருமடங்கு இலாபத்தைச் சந்தை நிலவரம் பார்த்து ஈட்டி வருகிறார். இவருக்குச் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் பூ சாகுபடி செய்து வருகிறார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் செந்தில் குமார், "விவசாயிகள் எங்களை அணுகும்போது, நாங்கள் கள ஆய்வுக்கு வருவோம். அங்கு வந்து நாங்கள் விவசாயிகளிடம் ஆலோசனை செய்வோம். மண் வளம், நீர் அமைப்பு, சீதோஷ்ண நிலை எல்லாவற்றையும் ஆராய்ந்து விவசாயிகள் எதைச் சாகுபடி செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்று எடுத்துக் கூறுவோம். விவசாயிக்குச் சம்மதம் எனில் ஆவணங்களை மேல் அதிகாரிக்கு அனுப்பி வைப்போம்.

ஏக்கருக்கு 16 லட்சத்து 88 ஆயிரம் வரை மானியம்:
அதன் பின் பணி ஆணை வாங்கி தருவோம். ஒவ்வொரு கட்ட வேலைகள் நிறைவடையும் போதும் அதற்கான தொகையை விடுவிப்போம். அடுத்தடுத்து பணிகள் முடிய முழுத் தொகையும் பயனாளி கைக்கு வந்து சேர்ந்துவிடும். சுமார் இத்திட்டம் மூலம் ஒரு ஏக்கருக்கு 16 லட்சத்து 88 ஆயிரம் வரை கிடைக்கும். இந்த பசுமைக்குடிலில் ஏக்கருக்கு 32 ஆயிரம் மலர்ச்செடிகளை வளர்க்கலாம்" என்கிறார்.
அழகரசன், சாமனப்பள்ளியில் தோட்டக்கலை மூலம் மலர்களைச் சாகுபடி செய்து வருகிறார். அவர், "நான் இருபது வருஷமாக விவசாயம் செய்து வருகிறேன். இதற்கு முன்பாக தக்காளி, முட்டைக் கோஸ், புதினா போட்டேன். எதிலும் நல்ல வருமானம் வரவில்லை. அதன் பின்னால்தான் மனம் வருந்தி விவசாயம் செய்வதையே விட்டுவிடலாம் என நினைத்தேன். அதன் பிறகு சூளகிரி தோட்டக்கலைக்குச் சென்று ஆலோசனைப் பெற்றேன். அவர்கள் மலர் சாகுபடியைப் பற்றிச் சொன்னார்கள். ஒரு ஏக்கரில் கொய் மலர்கள் போட்டு சாகுபடி செய்தேன். நினைத்த அளவு லாபம் கிடைத்தது. பசுமைக்குடில் அமைத்து சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 36 லட்சம் செலவு ஆகிறது. அதில் அரசு 50% மானியம் வழங்குகிறது. மானியமாக மட்டும் ஏக்கருக்கு 16 லட்சத்து 88 ஆயிரம் கிடைத்துள்ளது. இனி விவசாயமே வேண்டாம் என வெறுத்துப் போய் இருந்த காலத்தில் அரசு இந்த உதவியைச் செய்து கொடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ள இந்தத் திட்டம் சிறப்பான திட்டம். முறையாக விவசாயம் செய்து நல்ல வருமானம் ஈட்டித்தரும் உன்னதமான திட்டம். அதைச் செய்ய எனக்கு உதவி செய்த அரசுக்கும் ஸ்டாலினுக்கும் நன்றி. என் வாழ்நாளில் மறக்கமுடியாத உதவியாக இது அமைந்துவிட்டது " என்கிறார்.












Click it and Unblock the Notifications