குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்த எஸ்எஸ்ஐ.. மாரடைப்பால் மரணம் என நாடகமாடியது அம்பலம்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த எஸ்.எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர். மாரடைப்பால் மனைவி இறந்ததாக அவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராஜலட்சுமி (36). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவர்கள் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். ரமேஷ் கிருஷ்ணகிரி டேம் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார்.

மாரடைப்பு
இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி ராஜலட்சுமி வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ரமேஷ் கூறினார். ஆனாலும் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீஸார்
அங்கு ராஜலட்சுமியின் கழுத்து பகுதியில் காயம் இருந்தது. இதையடுத்து போலீசார் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மாரடைப்பு என நாடகம்
அதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து எஸ்எஸ்ஐ ரமேஷிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் குடும்ப தகராறில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்க மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரிய வந்தது.

கைதான கணவன்
இதைத் தொடர்ந்து ரமேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். முதலில் 174 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications