தேன்கனிக்கோட்டையில் நிலம் பிரச்சனை! கதறும் மக்களுக்காக கோதாவில் குதித்த ஹென்றி.. முதல்வருக்கு கடிதம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் கோயில் நில மீட்பு நடவடிக்கையால் 1000-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் கோரி அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரமைப்பின் சார்பில் டாக்டர் ஆ.ஹென்றி, மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், அங்கு வாழும் எளிய மக்களின் மனித கண்ணியத்தையும், எதிர்காலத்தையும் காக்க வேண்டியது ஒரு நலஅரசின் கடமை என்பதை அவர் தனது கோரிக்கையில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கெலமங்கலம், ஒசாபுரம் மற்றும் ஆனேகொள்ளு ஆகிய கிராமப் பகுதிகளில் திடீரென ஒரு பெரும் பரபரப்பும், மக்கள் மத்தியில் வாழ்வாதாரப் பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது.

Denkanikottai

இந்த கிராமங்களில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு காசிவிஸ்வநாதர், அருள்மிகு பட்டாளம்மன் மற்றும் அருள்மிகு விருப்பாட்சீஸ்வரர் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை

குறிப்பாக கெலமங்கலம் கிராமத்தின் புல எண்கள் 161, 325, 510/2, 129/1, 122/1, 121/1, 109, 293, 153/3, 153/1, 150/3, 154, 150/1 ஆகிய இடங்களிலும், ஒசாபுரம் கிராமத்தின் புல எண்கள் 2/1, 2/2, 138/1 மற்றும் ஆனேகொள்ளு கிராமத்தின் புல எண் 508 ஆகியவற்றிலும் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இந்த நிலங்களில் உருவாகியுள்ள குடியிருப்புகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் WP No.15968 of 2025 வழக்கில் கடந்த 06.04.2026 அன்று வழங்கிய உத்தரவின் அடிப்படையில், தற்பொழுது அதிகாரிகள் தரப்பில் நில அளவீடு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சொந்த இருப்பிடத்தை விட்டு எந்த நேரமும் வெளியேற்றப்படலாம் என்ற இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளதால், அங்குள்ள 1007-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

நில அளவீடு மற்றும் ஆக்கிரமிப்பு

இந்த சூழ்நிலையில்தான், அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரமைப்பின் சார்பில் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு மிக முக்கியமான கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும், அதே நேரத்தில் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வுரிமையும் மனிதநேயத்தோடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 என்பது ஒவ்வொரு குடிமகனின் வாழ்வுரிமையையும் உறுதி செய்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில், வாழ்வுரிமை என்பது வெறும் உயிர்வாழ்தல் மட்டுமல்ல, அதற்குள் கண்ணியமான குடியிருப்பு உரிமையும் அடங்கும் என்பதை தெளிவாக வரையறுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மாற்று குடியிருப்புகள் வழங்கி மறுவாழ்வு

Olga Tellis vs Bombay Municipal Corporation (1985) வழக்கில் வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்வுரிமை அர்த்தமற்றதாகிவிடும் என்றும், Chameli Singh vs State of Uttar Pradesh (1996) தீர்ப்பில் இருப்பிடம் என்பது மனித கண்ணியத்தின் அங்கம் என்றும், Sudama Singh vs Government of Delhi வழக்கில் முறையான மறுகுடியமர்வு இல்லாமல் குடியிருப்புகளை அகற்ற முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளதை அவர் ஆதாரமாக முன்வைத்துள்ளார்.

தமிழக அரசு ஏற்கனவே கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளில் வசித்த மக்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (முன்னாள் குடிசைப்பகுதி மாற்று வாரியம்) மூலம் பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி, நாவலூர் போன்ற இடங்களில் மாற்று குடியிருப்புகள் வழங்கி மறுவாழ்வு அளித்த அதே மனிதநேய அணுகுமுறையை இங்கும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் நிரந்தர வீடுகள்

இந்த 1007 குடும்பங்களில் தினக்கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், முதியோர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் உள்ளதால், அரசு உடனடியாக அங்கு சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஆ.ஹென்றி தனது கடிதத்தில் ஏழு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அதன்படி, வசிப்பவர்களின் வருமானம் மற்றும் தொழில் குறித்த சமூக பொருளாதார கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; உண்மையான குடியிருப்பாளர்களையும் வணிக ஆக்கிரமிப்புகளையும் தனித்தனியாக வகைப்படுத்த வேண்டும்; தகுதியான குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கலைஞர் கனவு இல்லம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அல்லது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் நிரந்தர வீடுகள் கட்டித் தர வேண்டும்.

GIS வரைபடம் மூலம் பாதுகாக்க வேண்டும்

மேலும் இந்த மாற்று குடியிருப்புகள் அனைத்தும் வேலைவாய்ப்பு, பள்ளி, மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதி உள்ள இடங்களுக்கு அருகில் அமைக்கப்பட வேண்டும்; முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும்; மீட்கப்படும் கோயில் நிலங்களில் எல்லைக்கற்கள் நட்டு, டிஜிட்டல் பதிவுகள், வேலி அமைத்தல் மற்றும் GIS வரைபடம் மூலம் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோயில் நிலத்தை மீட்பது நிர்வாகத்தின் கடமை; அதில் வாழும் ஏழை மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நலஅரசின் கடமை என்பதை உணர்ந்து, இந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ஆ.ஹென்றி தனது கடிதத்தில் மிக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+