ஓசூர் ஏர்போர்ட் கனவில் மண் அள்ளிப்போட்ட மத்திய அரசு: வில்சன் கேட்ட கேள்வி! மக்களவையில் வெடித்த மோதல்!
கிருஷ்ணகிரி: தமிழகத்தின் மிக முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக திகழும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஓசூரின் வளர்ச்சியை தடுக்கும் இந்த நடவடிக்கை, பொதுமக்களின் நலனுக்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் எதிரானது என்று வில்சன் தன்னுடைய உரையில் காட்டமாக சுட்டிக்காட்டினார்.
ஓசூர் ஏர்போர்ட் விவகாரம் மிகப்பெரிய விவகாரமாக இன்று உருவெடுத்துள்ளது.. தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் இந்த நகரம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

மத்திய அரசு - நாடாளுமன்றம்
இந்த அசுர வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்காகத்தான், ஓசூரில் ஒரு நவீன சர்வதேச விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.. அதுமட்டுமல்லாமல், இங்கு ஏர்போர்ட் வரவேண்டும் என்பது ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கனவாகும்.
ஆனாலும் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ சுற்றளவுக்குள் 2033ம் ஆண்டு வரை மற்றொரு சிவில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்ற ஒப்பந்த விதியை மத்திய அரசு இதற்கு முதன்மையான காரணமாக கூறுகிறது.
வில்சன் திமுக எம்பி
அத்துடன், அப்பகுதியில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் இந்திய விமானப்படை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, வான்வெளி பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், ஆசையுடன் காத்து கொண்டிருந்த தமிழக மக்களுக்கு அதிருப்தியையும், ஏமாற்றத்தையுமே தந்து வருகிறது..
இந்நிலையில்தான், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்.பி வில்சன், ஓசூர் ஏர்போர்ட் விவகாரத்தை எழுப்பினார்..
ஓசூர் ஏர்போர்ட் அனுமதி
திட்ட அனுமதி வழங்கப்படாதது குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடிய வில்சன் எம்.பி., மத்திய அரசின் இந்த அணுகுமுறை பாரபட்சமானது என்று குற்றம் சாட்டினார்.
"தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில் நகரமாக ஓசூர் திகழ்கிறது. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு வழங்கும் முக்கிய மையமாகவும், தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாகவும் இந்நகரம் விளங்குகிறது.
நகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதியளித்தார்.
டெல்லிக்கு ஒரு நீதி, ஓசூருக்கு ஒரு நீதியா
ஆனால், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ சுற்றளவில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை காரணம்காட்டி, மத்திய அரசு இந்த திட்டத்தை நிராகரித்துள்ளது. இது தற்போதுள்ள விமான நிலையத்திலிருந்து அந்த வான்வழித் தூரத்திற்குள் 2033ம் ஆண்டு வரை ஒரு புதிய சிவில் விமான நிலையம் அமைப்பதை தடுக்கிறது
உலக அளவில் லண்டன் முதல் நியூயார்க் வரை பல முக்கிய நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் மிக அருகருகே வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. ஏன் இந்தியாவிலேயே கூட, டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெறும் 90 கி.மீ தொலைவில் நொய்டா விமான நிலையம் அமைய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லிக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதியா?"
ஓசூர் சர்வதேச விமான நிலையம்
வான்வழி இணைப்பு என்பது நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு காரணியே தவிர, அது ஒருபோதும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையாது.. மத்திய அரசின் இந்த முட்டுக்கட்டை என்பது தேசியப் பாதுகாப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கை அல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் வணிக ஏகபோக உரிமையை பாதுகாக்கும் முயற்சியே.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முடக்கும் இத்தகைய கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஓசூர் மக்களின் நலன் கருதி. ஓசூர் சர்வதேச விமான நிலையம் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்" என்று வில்சன் எம்.பி. மத்திய அரசை வலியுறுத்தினார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications