கிருஷ்ணகிரியில் வாகனங்களை வழிமறித்து வசூல்? வீடியோவால் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுக்கு வந்த சிக்கல்
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலத்தில் இருந்து, ஓசூர், கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வழியாக அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனங்களை மத்தூர் சுங்கச்சாவடி அருகில் வழிமறித்து, போலீசார் பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
போலீசார் பொதுவாக மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்துவது வழக்கம். பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், சந்தேகத்திற்கு உரியவர்களை விசாரிக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் இந்த சோதனை அடிக்கடி நடத்தப்படுவது வழக்கம். கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளிலும், ஒவ்வொரு மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் சோதனைசாவடி அமைத்து சோதனை செய்வார்கள். அதேநேரம் திடீரென எல்லைப்பகுதிகளில் வேறு இடங்களிலும் சோதனை நடத்துவார்கள்.

அந்த வகையில், கர்நாடகா மாநிலத்திலும் சோதனை நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து, ஓசூர், கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வழியாக அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து சென்றன.
இதனால் மத்தூர் சுங்கச்சாவடி அருகில் ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை ரோந்து வாகன பிரிவு போலீசார் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது போலீசார், வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த பின்னரே அங்கிருந்து செல்ல அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே வாகன சோதனை செய்த போலீசாரை ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியிட்டார். இந்த வீடியோ அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை விசாரணை நடத்தினார். இதையடுத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த குற்றச்சாட்டை தொடர்ந்து. நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருநாகரன், ஏட்டு சரவணன் ஆகியோரை முதல் கட்டமாக கிருஷ்ணகிரி ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருநாகரன், ஏட்டு சரவணன் ஆகியோரை பணி இடைநீக்கம செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications