கிருஷ்ணகிரியில் சிக்கிய திருவண்ணாமலை மாமியார்- மருமகள்.. பாதி தமிழகத்தில் பெயர் பலகையே வைக்கணும் போல
கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் ஒரு சிலர் வறுமைக்கு திருடியதை பார்த்திருப்போம். சிலர் பிழைப்பே திருடுவது தான் என்பதாக உள்ளது. சிலர் குடும்பமாக திருடுகிறார்கள். இவர்கள் சொந்த ஊரில் திருட்டு வேலைகள் செய்யாமல், வெளியூர்களில் திருடுகிறார்கள். அப்படி திருடி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாமியார் மருமகள் பல ஊர்களில் கைவரிசை காட்டி வந்தார்கள். அவர்கள் கிருஷ்ணகிரியில் எப்படி சிக்கினார்கள் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
சிலர் பிழைப்பே திருடுவதாக இருக்கிறது. பல்வேறு ஊர்களில் சென்று கைவரிசை காட்டி பணம், நகையை திருடுகிறார்கள். சொந்த ஊரில் இப்படி கைவைப்பது இல்லை. எப்போதும் போல் சகஜமான வாழ்க்கை வாழ்வார்கள். வெளியூர்களில் நகை, பணம் திருடி சேர்க்கும் பணத்தில் உள்ளூரில் வீடு கட்டி பிரம்மாண்டமாக வாழ்வார்கள். சிலர் உள்ளூர் வெளியூர் என எல்லா ஊரிலும் கைவைத்தாலும் சிக்காமல் ஜாலியாக சுற்றுவார்கள்..அப்படியே சிக்கினாலும் ஜாமீனில் வந்த பின்னர் மீண்டும் திருடுவார்கள்..அப்படியான திருட்டு மாமியார், மருமகள் கிருஷ்ணகிரியில் சிக்கியுள்ளார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்கலட்டி கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் மனைவி முனிரத்னாவுக்கு 45 வயது ஆகிறது. முனிரத்னா கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி அட்சய திருதியையொட்டி நகை வாங்க கிருஷ்ணகிரியில் உள்ள நகை கடைக்கு செல்ல தேன்கனிக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.. பஸ்சில் கூட்ட நெரிசலில் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை யாரோ திருடிவிட்டார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஸ் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது 2 பெண்கள் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்தது அந்த கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில், அந்த பெண்கள் திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு கிராமத்தை சேர்ந்த கருப்பன் மனைவி அலமேலு (45), அவருடைய மருமகள் புவனா (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் முனிரத்தினாவிடம் ஓடும் பஸ்சில் பணத்தை திருடியது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் பெயரில் கூடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் பணம், நகை திருடி கைவரிசை காட்டுவதை வழக்கமாக வைத்து இருந்ததும் தெரிய வந்தது. கைதான மாமியார்-மருமகளை போலீசார் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications