கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை.. இரவோடு இரவாக மேலும் இரண்டு பேர் கைது! என்ன தான் நடக்கிறது?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளியில் நடந்து போலி என்சிசி முகாமில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஏற்கனவே 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான சிவராமன் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், இப்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் அருகே தனியார்ப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் இந்த பள்ளியில் என்சிசி முகாம் ஒன்று நடந்தது. அதில் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பலாத்காரம்: இந்த என்சிசி முகாமில் கலந்துகொண்ட 12 வயது மாணவி ஒருவரை என்சிசி பயிற்சியாளரான சிவராமன் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இருப்பினும், அந்த சிறுமி பள்ளி முதல்வர் சாம்சனிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். அந்த மாணவி குறித்து யோசிக்காத சாம்சன், இது வெளியே தெரிந்தால் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்று வெளியே சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார்.
வீடு திரும்பிய அந்த சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அப்போது போலீசார் கேட்ட போது தான் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த மாணவி உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திடுக் தகவல்கள்: போலீசார் விசாரணை நடத்திய போது இதில் பல பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது. சிவராமன் நாம் தமிழர் இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி மேலும், சில மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் உண்மையான என்சிசி மாஸ்டரே இல்லை என்பதும் பள்ளியில் நடந்தது போலி என்சிசி முகாம் என்பதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் போலீசார் சிவராமனை கைது செய்ய சென்ற போது, அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் கடந்த 23ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிவராமன் உயிரிழந்தார். அன்றைய தினமே அவரது தந்தையும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
மேலும் இருவர் கைது: இந்த வழக்கை இப்போது சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகிறார்கள். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே இருவரையும் போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications