இயற்கை “ஆர்வக்கோளாறு”.. வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்! மனைவி உயிரே போச்சே - கிருஷ்ணகிரியில் ஷாக்
கிருஷ்ணகிரி: இயற்கை முறையில் மனைவிக்கு வீட்டிலேயே கணவன் பிரசவம் பார்த்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.
கிருஷ்ணாகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்து உள்ள புளியம்பட்டி கிராமபத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகள் லோகநாயகி. இவருக்கும் தருமபுரி மாவட்டம் காரியமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் என்பருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்றது.

வேளாண்மை பட்டம் படித்த இருவருமே இயற்கை வாழ்வியலில் ஆர்வம் கொண்டவர்கள். குறிப்பாக லோகநாயகி சிறு வயதில் இருந்தே இயற்கையான முறையில் விளையும் பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். தனது வயல், தோட்டத்திலும் இயற்கையான முறையில் நெல், காய்கறிகளை விளைவித்து உண்டு வந்தார்.
ரசாயன உரம் மற்றும் பூச்சி கொள்ளியை அவர் பயன்படுத்தியது இல்லை. திருமணத்தில் கூட இயற்கையான முறையில் விளைந்த நெல்லில் கிடைத்த அரசியிலேயே உணவு சமைத்து விருந்து கொடுத்தார். இயற்கையான முறையில் விளைந்தால் மட்டுமே பூவை கூட தலையில் வைப்பாராம். அந்த அளவுக்கு இயற்கை விரும்பி.
கடந்த சில மாதங்களுக்கு கருத்தரித்த லோகநாயகிக்கு பிரசவ நேரம் வந்தது. அனுமந்தபுரத்தில் உள்ள கிராம செவிலியரிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துவிட்டு தனது கணவருடன் தாய் வீட்டுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் வந்து இருக்கிறார் லோகநாயகி.

அனைத்தையும் இயற்கையாகவே செய்ததைபோல், பிரசவத்தையும் மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கையாகவே செய்ய வேண்டும் என விரும்பினார் லோகநாயகி. கணவன் மாதேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இன்று அதிகாலை லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மாதேஷ் அவரை மருத்துவமனை அழைத்து செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்து உள்ளார்.
அவருக்கு ஆண் குழந்தை சுயப்பிரசவமாக பிறந்து இருக்கிறது. ஆனால், நச்சுக்கொடி வெளியில் வராமல் லோகநாயகிக்கி கடுமையாக ரத்தப்போக்கு ஏற்பட்டு இருக்கிறது. நச்சுக்கொடி சிறிது நேரத்தில் வெளியில் வந்து விடும் என நினைத்து இருக்கிறார் மாதேஷ். ஆனால், லோகநாயகிக்கி திடீரென வலிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
காலை 10 மணியளவில் போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லோகநாயகியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர். இது தொடர்பாக புளியம்பட்டி கிராம செவிலியர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மருத்துவமும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டதால் பிரவச காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவது பெருமளவில் குறைந்து இருக்கிறது. ஆனால், யூடியூப் சேனல்களில் பணம் சம்பாதிப்பதற்காக பலர் இயற்கை என்று கூறி நவீன மருத்துவத்துக்கு எதிராக வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை ஊக்குவித்து எப்படி பிரசவம் பார்க்க வேண்டும் என வீடியோக்களையும் வெளியிட்டு உள்ளார்கள்.
இவர்கள் சொல்வதை கேட்டு ஏராளமான மக்கள் அப்படியே நம்பி நிஜத்திலும் செய்து வருகிறார்கள். இப்படி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதாக கூறி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என அரசு அறிவித்தது. ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications