எடுத்துச் செல்லப்பட்ட ராணி எலிசபெத் உடல்! கண் கலங்கிய மன்னர் சார்லஸ்.. பிரிட்டன் மக்கள் மவுன அஞ்சலி
லண்டன்: ராணி எலிசபெத் உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் எலிசபெத். 1952 முதல் 70 ஆண்டுகளுக்கு எலிசபெத் ராணியாக இருந்தார்.
96 வயதான ராணி எலிசபெத் வயது மூப்பு காரணமாக சில மாதங்களாகவே உடல்நிலை பாதிப்புகளைச் சந்தித்து வந்தார். இதனால் அவரால் நீண்ட நேரம் நிற்கவும் நடக்கவும் முடியவில்லை.

ராணி எலிசபெத்
இதன் காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் அவர் ஓய்வு எடுத்து வந்தார். இதனிடையே திடீரென கடந்த கடந்த செப். 8இல் ராணி எலிசபெத் உடல்நிலை மோசமடைந்தது. அதற்கு இரு நாட்களுக்கு முன்பு தான் பிரிட்டன் புதிய பிரதமரை அறிவிக்கும் நிகழ்வில் ராணி எலிசபெத் கலந்து கொண்டார். இருப்பினும், உடல்நிலை மிகவும் மோசமடையவே குடும்ப உறுப்பினர்கள் அங்கு விரைந்தனர்.

நல்லடக்கம்
மருத்துவர்களும் அவருக்குச் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அன்றைய தினமே அவர் காலமானார். ராணியின் மறைவைத் தொடர்ந்து மூத்த மகன் சார்லஸ் புதிய அரசராகப் பொறுப்பு ஏற்றார். ராணி எலிசபெத்திற்கு 10 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே
இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராணி எலிசபெத் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இதே தேவாலயத்தில் தான் ராணி எலிசபெத்திற்கு திருமணமும் அவர் ராணியாகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது பதவியில் இருக்கும் அனைத்து அரசு குடும்பத்தினரும் கறுப்பு ராணுவ உடை அணிந்து இருந்தனர்.

குடும்ப உறுப்பினர்கள்
புதிய மன்னர் சார்லஸ் பதக்கங்களுடன் கூடிய சடங்கு ராணுவ சீருடையை அணிந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் போது அங்கு சில நெகிழ்ச்சியான காட்சிகளைப் பார்க்க முடிந்தது. ராணி எலிசபெத்தின் மகன் கிங் சார்லஸ் மற்றும் அவருடன் பிறந்த அன்னே, ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் ஆகியோர், ராணி எலிசபெத்தின் உடல் எடுத்துச் செல்லப்படும் போது முதல் வரிசையில் சென்றனர்.

ராணுவ உடை மன்னர்
அவர்களுக்குப் பின்னால் சார்லஸின் மகன்கள், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி மற்றும் அரச குடும்பத்தின் பிற மூத்த உறுப்பினர்கள் வந்தனர். சார்ல்ஸ் மற்றும் வில்லியம் அரசு காரில் வந்தனர். அதேநேரம் ஹாரி தனது அரசு பதவியைத் துறந்து இருந்ததால் அவர் அதற்குப் பின்னால் வந்தார். மேலும், அவர் மற்ற அரசு குடும்பத்தினரைப் போல ராணுவ உடையில் வரவில்லை. சாதாரண கறுப்பு உடையிலேயே இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

கலங்கிய
ராணி எலிசபெத் மறைவுக்குப் பின்னர் புதிய மன்னராகப் பொறுப்பேற்ற சார்லஸ், கடந்த 11 நாட்களாகப் பிரிட்டன் நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில், ராணியின் உடல் நல்லடக்கம் செய்யத் தூக்கப்பட்ட போது சார்லஸின் கண்கள் கலங்கின. மன்னரின் மனைவி காமிலா உள்ளிட்டோரும் கூட ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்போது துக்கமாகவே இருந்தனர்.












Click it and Unblock the Notifications