கர்ப்பத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை.. டாய்லெட் சென்ற பெண்! குழந்தையுடன் வந்ததால் ஒரே குழப்பம்!
லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த மாணவி ஒருவர் இரவு நேரத்தில் செய்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது வாந்தி, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் மூலம் அவர்கள் கருவுற்று இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், கரு வளர்வதாகல் அவர்கள் வயிறு பெரிதாகக் காணப்படும். இதனை ஆங்கிலத்தில் பேபி பம்ப் என்று அழைப்பார்கள்.

பேபி பம்ப்
பேபி பம்ப் உள்ளிட்ட கர்ப்பத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறார்களா? அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பிரிட்டனில் நடந்துள்ளது. எல்லாவற்றையும் விட அந்தப் பெண்ணுக்கே தான் கருவுற்று இருப்பது தெரியாதாம். எதையும் தெரியாமலேயே அந்த பெண் கருவை ஒன்பது மாதங்கள் சுமந்து உள்ளார்,

பிரிட்டன் மாணவி
பிரிட்டன் நாட்டை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஜெஸ் டேவிஸ். 19 வயதான இவர் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு பேபி பம்ப் உள்ளிட்ட கர்ப்பமாக இருந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமலேயே இருந்துள்ளது. அவ்வப்போது அவருக்கு வயிற்று வலி மட்டும் இருந்துள்ளது. இருப்பினும், மாதவிடாய் காரணமாக தனக்கு வயிற்று வலி வருவதாக அந்தப் பெண் நினைத்துக் கொண்டார்

வயிற்று வலி
இந்தச் சூழலில் தான், சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அதிகாலை நேரத்தில் திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. முதலில் மாதவிடாய் காலம் தனக்குத் தொடங்குகிறது என்றே அந்தப் பெண் நினைத்துள்ளார். எழ முயன்ற போதும், அந்த பெண்ணால் முடியவில்லை. இதனால் கட்டிலிலேயே அவர் அப்படியே படுத்துக் கொண்டார். திடீரென வயிற்றில் எதோ ஒரு உணர்வு தோன்ற அவர் டாய்லெட்டிற்கு விரைந்துள்ளார்.

உள்ளுணர்வு
வயிற்று வலி கடுமையானதாக மாறவே, வயிற்றில் இருந்து எதோ கிழித்துக் கொண்டு வருவதைப் போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவரால் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும், உள்ளுணர்வு காரணமாக அவர் வலிகளையும் பொறுத்துக் கொண்டுள்ளார். அந்தச் சமயத்தில் திடீரென அவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆண் குழந்தை
அந்த குழந்தை அழத் தொடங்கியதும் தான் அவருக்கு என்ன என்ன நடந்தது என்று அவருக்குப் புரிந்தது. இதையடுத்து பதற்றமடைந்த அந்தப் பெண் உடனடியாக தனது நண்பருக்குக் கால் செய்து நடந்ததை விளக்கி உள்ளார். அதன் பின்னரே தாயும் சேயும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவரது ஆண் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளது.

மருத்துவமனை
அந்த குழந்தை 35 வார கர்ப் காலத்தில் பிறந்து உள்ளது. குழந்தை இப்போது இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இதுவரை தற்போது தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தை பிறக்கும் போது, சுமார் 3 கிலோ எடை உடன் பிறந்து உள்ளது.

மகிழ்ச்சி
இது தொடர்பாகக் குழந்தையைப் பெற்று எடுத்த ஜெஸ் கூறுகையில், "எனது மாதவிடாய் எப்போதும் ஒழுங்கற்றதாக இருக்கும், அதனால் நான் உண்மையில் கவனிக்கவில்லை. எனக்குக் குழந்தை பிறந்த போது அதிர்ச்சி அடைந்தேன். நான் முதலில் அதைக் கனவு என்றே நினைத்தேன். இயல்பு நிலைக்கு வர எனக்கு சில காலம் பிடித்தது. ஆனால் இப்போது நான் மிக மகிழ்ச்சியாக உள்ளேன். எனது வாழ்க்கையில் அவர் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்" என்றார்.












Click it and Unblock the Notifications