"எப்புட்றா!" 10 வயசு குட்டி பொண்ணு.. அதுக்குள் 50 நாடுகளுக்கு டிரிப்! ஆன ஒரு நாள் கூட லீவ் போடலையாம்
லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், வெறும் 10 வயதில் 50 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அதுவும் ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல்.. அவர் எப்படி இதைச் செய்தார் என்பதைப் பார்க்கலாம்.
எப்போதும் பயணங்கள் தான் ஒருவரைச் செதுக்கும். பயணங்கள் மூலம் நாம் புது நபர்களைக் கலாச்சாரங்களைச் சந்திப்போம். இருப்பினும், ஒரு இடத்திற்கு பிளான் பண்ணி வெளியே போய் வருவதே இங்குப் பெரிய விஷயமாக இருக்கிறது.

ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயதே ஆன அதிதி என்ற சிறுமி, 50 நாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அதுவும் ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்காமலேயே இவர் இத்தனை நாடுகளுக்குச் சென்றுள்ளார். எப்படி இத்தனை நாட்களுக்கு இவரால் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் செல்ல முடிந்தது என்பதையே பலரும் வியந்து பேசி வருகின்றனர்.
சிறுமி: அதிதியின் தந்தை தீபக்.. தாய் அவிலாஷா.. இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும் இவர்கள் இப்போது தெற்கு லண்டனில் வசித்து வருகின்றனர். அங்கிருந்தபடி இவர்கள் ஐரோப்பா, நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து என மொத்தம் 50 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர்.
அதிதிக்கு வெறும் 3 வயதான போது இந்த பயணத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். முதலில் ஜெர்மனி நாட்டிற்குச் சென்ற நிலையில், அது அதிதிக்கு ரொம்பவே பிடித்துப் போகவே அடுத்தடுத்து பிரான்ஸ், இத்தாலி ஆஸ்திரியா எனப் பல நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
எதற்காக: அதிதியின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்கு பயணம் செய்யும் ஒரு நபராகவும் பல கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு குழந்தையாகவும் இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்தனர். பள்ளிப் படிப்பு பாதிக்காத அதே வேலையில், அவள் உலகின் பல நாடுகளுக்குச் சென்று வெவ்வேறு கலாச்சாரங்கள், உணவுகள் மற்றும் மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர்.
இதற்காக அவர்கள் ஸ்பெஷலாக ஒரு திட்டத்தையும் போட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு முறையும் விடுமுறை வரும் போது அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அதாவது அந்த சிறுமிக்கு எப்போதெல்லாம் விடுமுறை வருகிறதோ.. அப்போதெல்லாம் பேக்கை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குக் கிளம்பிவிடுவார்களாம். இதற்காக இவர்களுக்குக் கடந்த ஓராண்டில் 20,000 பவுண்டுகள் செலவாகியுள்ளது.
உலக நாடுகள்: இருப்பினும், அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்கிறார்கள் இவர்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், "நேபாளம், இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருக்கும் பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டு அவள் உற்சாகம் அடைந்தாள்.. மூன்று வயதில் நர்சரியில் இருந்த போது நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம்.
வெள்ளிக்கிழமை இரவு நாங்கள் ஊரை விட்டுக் கிளம்புவோம்.. பல இடங்களுக்குச் சென்று சுற்றிவிட்டு ஞாயிற்றுக்கிழமை லேட் நைட்டில் கிளம்பி 11 மணிக்கு வந்துவிடுவோம்.. சில சமயம் திரும்பத் திங்கள் காலை கூட ஆகும். அப்போது அவர் நேரடியாகப் பள்ளிக்குச் சென்றுவிடுவார்" என்று அவர் தெரிவித்தார்.
செலவை சமாளிக்க: அதிதியின் பெற்றோர் கணக்காளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.. அவர்கள் இதுபோல வெளிநாடுகளுக்குப் பயணிக்க ஆண்டு முழுக்க சேமிக்கிறார்கள்.. இதற்காக அவர்கள் வெளியே சாப்பிடவே மாட்டார்களாம்.. காரை விட்டுவிட்டு பொதுப் போக்குவரத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள். கணக்காளர்களாக இருந்தாலும் இவர்களிடம் சொந்தமாக கார் இல்லை..
அதிலும் கொரோனா வந்த பிறகு இவர்கள் இப்போது வீடுகளில் இருந்து தான் வேலை செய்து வருகிறார்கள். ஒரு ஆண்டில் குறைந்தது 12 இடங்களுக்கு வரை சென்றுள்ளனராம். இந்த சின்ன வயதிலேயே அந்த சிறுமி 50 நாடுகளின் கலாச்சாரத்தைத் தெரிந்து கொண்டுள்ளார்.
எந்த நாடு பிடிக்கும்: இது குறித்து அதிதி மேலும் கூறுகையில், "எனக்குப் பிடித்தமான நாடு என்று குறிப்பிட்டு ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. ஆனால் நேபாளம், ஜார்ஜியா, ஆர்மீனியா நாடுகள் எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது. நேபாளத்தில் நான் குதிரை சவாரி செய்தேன், நீளமான கேபிள் காரில் சென்றேன், எவரெஸ்ட் மலையைப் பார்க்க முடிந்தது. பயணம் செய்யும் போது நிறைய வேடிக்கை பார்க்கலாம். அது எனக்குப் பிடிக்கும். மேலும் மற்ற கலாச்சாரங்களையும் தெரிந்து கொள்ள உதவுவதால் அனைத்து குழந்தைகளும் இப்படிச் செல்லலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications