லண்டனில் ஜெய்சங்கரை தாக்க முயற்சி.. காருக்கு முன் பாய்ந்து தேசியக்கொடியை கிழித்த காலிஸ்தானி.. ஷாக்
லண்டன்: லண்டன் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் காருக்கு குறுக்கே திடீரென்று பாய்ந்து நம் நாட்டின் தேசியக்கொடியை கிழித்த காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் அவரை தாக்க முயன்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 4ம் தேதி முதல் ஜெய்சங்கர் பிரிட்டனில் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு 9 ம் தேதி வரை இருப்பார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது நம் நாட்டுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான உறவு பற்றி விவாதித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்றைய தினம் லண்டனில் உள்ள சாத்தம் ஹவுசுக்கு ஜெய்சங்கர் சென்றார்.
சாத்தம் ஹவுஸில் ஜெய்சங்கர், லண்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமியை சந்தித்தார். அப்போது இருநாடுகள் இடையேயான ஒருங்கிணைப்பு, அரசியல் ஆதரவு, வர்த்தகம், கல்வி, டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஜெய்சங்கர் விவாதித்தார். இந்த சந்திப்பை முடித்துவிட்டு சாத்தம் ஹவுஸில் இருந்து ஜெய்சங்கர் வெளியே வந்தார்.
அந்த சமயத்தில் சாத்தம் ஹவுசுக்கு வெளியே காலிஸ்தான் கொடியை ஏந்தி கொண்டு சிலர் ஜெய்சங்கருக்கு எதிராகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுப்புகள் வைத்து தடுத்து வைத்திருந்தனர். ஜெய்சங்கர் சாத்தம் ஹவுஸின் வாயிலில் இருந்து காரில் ஏற முயன்றார். அப்போது திடீரென்று காலிஸ்தான் ஆதரவாளர் காருக்கு குறுக்கே பாய்ந்து ஜெய்சங்கரை தாக்கும் வகையில் ஓடினார்.
ஆனால் சுதாரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவரை பிடித்தனர். அப்போது காரின் முன்பே நின்ற அந்த நபர் நம் நாட்டின் தேசியக்கொடியை எடுத்து கிழித்தார். இதையடுத்து அந்த நபரை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. லண்டனில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நம் நாட்டை பொறுத்தவரை காலிஸ்தான் அமைப்பு என்பது பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யார் என்றால் பஞ்சாப்பில் வாழும் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று கூறி வருபவர்கள். இந்தியாவில் பிரிவினை கோரும்
காலிஸ்தானியர்கள் நம் நாட்டில் அழித்து ஒழிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் கூட காலிஸ்தான் அமைப்பு வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது. கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தபடியே நம்நாட்டுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் சதியை மத்திய அரசு முறியடித்து தக்க பாடம் கற்பித்து வருகிறது.
மேலும் வெளிநாட்டில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் இப்படி எல்லை மீறுவது இது முதல் முறையல்ல. வெளிநாடுகளில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது, இந்திய திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தலைவர்களுக்கு எதிராக போராடுவது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான் லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தின்போது அவரை தாக்க முயற்பட்டு நம் நாட்டின் தேசியக்கொடியை கிழித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர் இந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications