நொறுங்கிய கண்ணாடி கிண்ணம்.. ஹாரியின் சட்டையை பிடித்து, அடித்த வில்லியம்ஸ்.. அரசு குடும்பத்தில் அடிதடி
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதையில் எழுதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
லண்டன்: ராஜ பரம்பரையே என்றாலும், நாட்டை ஆளும் மன்னர் குடும்பமே என்றாலும், அடிதடி பஞ்சாயத்தெல்லாம் இருக்கும் போல.. அப்படித்தான் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸ் - டயானா தம்பதிக்கு பிறந்த 2வது மகன் இளவரசர் ஹாரி... இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடிகையான மேகன் மார்கெலை காதலித்து வந்தார்.
கடந்த 2018ல் 2 பேருமே திருமணம் செய்து கொண்டனர்.. ஆனால், அரச குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. அதாவது, நிறம் சார்ந்தும் பல்வேறு விமர்சனங்களை மேகன் எதிர்கொண்டார்.

கசப்புகள்
கடைசியில் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டார்கள். இதற்கு பிறகு, தங்களது காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்து ஹாரி - மேகன் தம்பதி அளித்த பல்வேறு பேட்டிகள், இங்கிலாந்து அரச குடும்பத்தில் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து ஏற்படுத்தியது. மேகன் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என்றெல்லாம் அரச குடும்பத்தினர் ரொம்பவே கவலைப்பட்டார்கள்.. பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசியதாக, அந்த தம்பதியினர் ஓபனாக சொல்லியிருந்தது, பேசுபொருளாக உருவெடுத்தது.

கசப்பு
இப்படிப்பட்ட சூழலில், இளவரசர் ஹாரி ஸ்பேர் (spare) என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார்... அந்த புத்தகம் வருகின்ற 10ம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனினும், இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில விஷயங்கள் வெளியே கசிந்துள்ளன.. குறிப்பாக, "கடந்த 2019ம் ஆண்டு மேகன் மார்கெல் பற்றி, லண்டன் வீட்டில் எனக்கும், என் சகோதரர் வில்லியமுக்கும் தகராறு வந்துவிட்டது..

கிண்ணம்
அப்போது வில்லியம், மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர் என்றெல்லாம் விமர்சித்தார்.. ஒரு கட்டத்தில் வில்லியம், என்னுடைய சட்டை காலரை பிடித்து இழுத்தார்... என்னுடைய கழுத்தில் கிடந்த சங்கிலியை பிய்த்து எறிந்தார்.. என்னையும் கீழே தரையில் தள்ளிவிட்டார். நான் தடுமாறி நாய்க்கு தீனியிடும் கிண்ணத்தில் விழுந்துவிட்டேன்.. அந்த கிண்ணம் உடைந்து, என்னுடைய முதுகில் காயத்தை ஏற்படுத்திவிட்டது..

முதுகில் காயம்
நான் ஒரு நிமிஷம் அப்படியே படுத்துவிட்டு, அதற்கு பிறகுதான், கொஞ்சம் தெளிந்து, மெதுவாக எழுந்து வந்தேன்.. கீழே விழுந்துவிட்டதால், என்னுடைய முதுகில் காயம் ஏற்பட்டது.. இவை எல்லாம் மிக வேக வேகமாக நடந்து முடிந்துவிட்டன என்றெல்லாம் புத்தகத்தில் எழுதியுள்ளார்.. இந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களால் அரசு குடும்பத்தினர் ஹாரி மீது கோபம் கொள்ளக்கூடும் என்றும் சொல்கிறார்கள்..

பூதங்கள்
மன்னர் சார்லஸ் தன்னுடைய முடிசூட்டு விழாவிற்கு தயாராகும்போதுகூட, சகோதரர்களின் உரசல் உறவு பற்றிய செய்தி விவாதத்திற்கு வந்தது.. அதற்கு முன்பிருந்தேகூட, இவர்களுக்குள் முட்டல் மோதல்கள் இருந்து கொண்டுதான் வந்துள்ளது.. இப்போது புத்தகம் போட்டு பிரிண்ட் ஆகும் அளவுக்கு சென்றுவிட்டதுதான், ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. வரும் 10ம் தேதி அந்த புத்தகம் வெளியாவதற்குள், என்னென்ன பூதங்கள் கிளம்ப போகிறதோ?












Click it and Unblock the Notifications