ராணி எலிசபெத் உடல் லண்டன் வருகிறது.. கண்ணீரில் மக்கள்.. இறுதி அஞ்சலிக்கு தயாராகும் பிரிட்டன்..!
புதிய ராஜாவாக நாளை சார்லஸ் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதிய ராஜாவாக சார்லஸ் பதவியேற்பார் என தெரிகிறது.
பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் தான் இரண்டாம் எலிசபெத்.
96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த போதும் அவர், அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.

புதிய அரசர்
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாகவே, ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர் காலமானார்.. ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ‛பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் , இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கொடிகள்
ராணியின் உடல் இன்று லண்டனுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வழக்கப்படி, ராணி உயிரிழந்த 2ம் நாள் காலை, பிரிட்டன் கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள். அதுவரை அவர் இடைக்கால அரசராக செயல்படுவார்.. ராணி இறந்த மறுநாள், அதாவது இன்று மீண்டும் கொடிகள் ஏற்றப்பட்டு காலை 11 மணிக்கு சார்லஸ் அதிகாரப்பூர்வமாக மன்னராக பதவியேற்பார். இன்று மாலை அரச தலைவராக தனது முதல் உரையை அவர் ஆற்றுவார்.

பக்கிங்ஹாம் பேலஸ்
புதிய மன்னர் சார்லஸ் தன்னுடைய தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இங்கிலாந்து, எடின்பர்க், பெல்ஃபாஸ்ட் மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். ராணி இறந்த 4 நாட்களுக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு ஊர்வலம் நடத்தப்படும். அங்கு அவரது உடல் வைக்கப்படும். முக்கியமான நபர்கள் முதலில் அஞ்சலி செலுத்துவர். அதனையடுத்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

மரியாதை
இதையடுத்து, ஒன்பதாம் நாள், இறுதி சடங்கு நடைபெறும். பிரிட்டன் அரசு மரியாதையுடன் ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும். இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ராணி உடல் விண்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும். , அங்கு அவர் தனது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் அவரது தந்தை கிங் ஜார்ஜ் VI ஆகியோருக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவார்.

அரண்மனை வாயில்
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் அழத் தொடங்கினர். அவரது மறைவுசெய்து அறிந்து, ஏராளமானோர் அரண்மனை வாயிலில் கூடியுள்ளனர்.. ராணி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் பாடல்களை பாடி கண்ணீர் மல்க வெளிப்படுத்தி வருகிறார்கள்.. ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அறிவிப்பு
இதனிடையே, இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணம் அடைந்ததையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது... இந்த ஆட்டம் மறுபடியும் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications