"முதுகு வலி, கொரோனா என பல பாதிப்பு!" ஓராண்டாகவே ராணி எலிசபெத்திற்கு பிரச்சினைகள் தான்! பரபர தகவல்
லண்டன்: பிரிட்டன் மகாராணி எலிசபெத் வியாழக்கிழமை காலமானார். இருப்பினும், கடந்த ஓராண்டாகவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டே இருந்தது.
பிரிட்டன் நாட்டில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். இதையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார்.
பிரிட்டன் மகாராணி எலிசபெத் இப்போது காலமானாலும் , சுமார் ஓராண்டாகவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டே இருந்தது. கடந்த அக்டோபர் முதலே அவரது உடல்நிலை மோசமடைந்தது.

அக்டோபர் 2021
இதனால் மருத்துவர் அறிவுரைப்படி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்தே வந்தார். வயது மூப்பு காரணமாக அவர் நிற்கவும் நடக்கவும் சிரமப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் வாக்கிங் ஸ்டிக்கைப் பிடித்தே நடந்தார். ராணி எலிசபெத் பொது நிகழ்வில் வாக்கிங் ஸிட்க்கை பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும். மேலும், உடல்நலக்குறைவு காரணமாக அவரது வடக்கு அயர்லாந்து பயணம் ரத்து செய்யப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி
அக்டோபர் மாதமே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி அவர், தனது வழக்கமான பணிகள் சிலவற்றை மேற்கொள்ளத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சற்று மேம்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 1ஆம் தேதி லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டை அவர் கார் ஓட்டிய படங்கள் வெளியானது.

கொரோனா
இருப்பினும், மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக அவர் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐநா காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. மேலும், முதுகு வலி காரணமாக நவம்பர் 14இல் நடக்கும் வருடாந்திர நினைவு தினத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தாண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக லேசான கொரோனா பாதிப்பே அவருக்கு ஏற்பட்டது.

உடல்நலல்குரைவு
இந்தாண்டு மார்ச் மாதம் சில அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் கடந்த ஆண்டு 99 வயதில் உயிரிழந்த தனது மறைந்த கணவர் இளவரசர் பிலிப் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தாண்டு ஏப்ரலில் நடைபெற்ற பாரம்பரிய மத நிகழ்ச்சியிலும் உடல்நலக் குறைவால் அவர் கலந்து கொள்ளவில்லை. மே மாதம் அருக்கு எபிசோடிக் மொபிலிட்டி பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் அவரது மகன் சார்லஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

70 ஆண்டுகள்
கடந்த ஜூலை 3இல் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒட்டுமொத்த பிரிட்டனே திரண்டு வந்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி இருந்தது. இருப்பினும் உடல்நிலை காரணமாக அவர் இரு நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொண்டார்.

பொது நிகழ்ச்சிகள்
சமீப காலங்களாகவே அவர் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த மாத தொடக்கத்தில் நடைபெறும் பாரம்பரிய ப்ரேமர் கேதரிங் ஹைலேண்ட் கேம்ஸ் நிகழ்ச்சியிலும் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், கடந்த செப். 6ஆம் தேதி லிஸ் ட்ரஸை பிரதமராக நியமிக்கும் நிகழ்வில் மட்டும் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியும் கூட எப்போதும் பக்கிங்ஹாம் அரண்மனையில் தான் நடக்கும். இருப்பினும், எலிசபெத் ராணியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், ஸ்காட்லாந்தில் இந்த நிகழ்வு நடந்தது.

மோசமான பாதிப்பு
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதன் காரணமாகச் செப்டம்பர் 7 முதல் அவர் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்தச் சூழலில் தான் நேற்று வியாழக்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு அவர் காலமானார்.












Click it and Unblock the Notifications