கிருஷ்ண பக்தர், பகவத் கீதை மீது பிரமாணம்! கிறிஸ்தவ பெரும்பான்மை நாடு பிரிட்டனை ஆளப்போகும் ரிஷி சுனக்
லண்டன்: இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார். ரிஷி சுனக், கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானபோது பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்ற செய்தி தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிரிட்டன் பிரதமர் என்ற பதவியை அலங்கரிக்க ஆளுங்கட்சியின் 100 எம்.பிக்களின் ஆதரவை பெற வேண்டும். அந்த வகையில் தற்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியில் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவோடு அடுத்த பிரதமர் ஆகிறார் ரிஷி சுனக். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதுமட்டுமின்றி வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர், முதல் இந்து பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் 45 நாட்கள் பிரதமராக இருந்த நிலையில் லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இங்கிலாந்து பிரதமர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த முதல் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட போது, அவர் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்ற செய்தி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ரிஷி சுனக்
புதிய வரலாறு படைத்துள்ள ரிஷி குறித்து இந்தியர்கள் பலரும் வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரிஷி சுனக்கிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரிஷி சுனக் கிருஷ்ண பக்தர். இவர் அடிக்கடி அங்குள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண பக்தர்
பகவத் கீதை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதையொட்டியே தனது மகள்களில் ஒருவருக்கு 'கிருஷ்ணா' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. யார்க்ஷைர் எம்.பியாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற போது பகவத் கீதை மீது சத்ய பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதற்கு முன்பு எந்தவொரு எம்.பியும் பகவத் கீதையையும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததில்லை.

பகவத் கீதை
தனது நெருக்கடியான காலகட்டங்களில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பகவத் கீதை தான் பெரிதும் உதவியதாக பலமுறை கூறியிருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தி நாளில் பகவான் கிருஷ்ணரை தரிசனம் செய்வார் ரிஷி சுனக். டவுனிங் தெருவில் உள்ள தனது குடியிருப்பில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.

இந்திய வம்சாவளி பிரதமர்
ரிஷி சுனக்கிற்கு 42 வயதாகிறது. அவரது தாத்தா இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் ராம்தாஸ் சுனக். பஞ்சாப்புக்கு உட்பட்ட குஜ்ரன்வாலா பகுதிதான் அவரது பூர்வீகம் ஆகும். நாடுகள் பிரிக்கப்பட்டபோது அந்த பகுதி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தனது இந்திய பாரம்பரியத்தையும், பெற்றோர்கள் கற்றுக் கொடுத்த கலாச்சாரத்தையும் ஒருபோதும் மறக்காதவர் ரிஷி சுனக். அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் பெங்களூரு வந்து தனது மாமனார் நாராயணமூர்த்தியை பார்த்துவிட்டு செல்வார். இங்கிலாந்து நாட்டின் மிகவும் பணக்கார பிரதமர் ரிஷி சுனக் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். கிட்டத்தட்ட 700 மில்லியன் பவுண்டிற்கு மேல் சொத்துகளை வைத்திருக்கிறார்.

படிக்கும் போதே மாணவர் தலைவர்
ரிஷி சுனக்கின் தந்தை யஷ்வீர் சுனக். அவர் கென்யாவில் பிறந்தார். அவரது தாய் உஷா, டான்சானியாவில் பிறந்தவர் ஆவார். இவர்கள் அனைவரும் 1960ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்தனர். டாக்டரான யஷ்வீரும், மருந்தாளரான உஷாவும் இங்கிலாந்தின் ஹாம்பிசைர் மாகாணம் சவுத்தாம்ப்டன் நகரில் மருந்தகம் ஒன்றை அமைத்து தொழில் செய்து வந்தனர். ஹாம்ப்சைரில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், பின்னர் வின்செஸ்டரில் உள்ள ஆண்கள் பள்ளியில் அங்கேயே தங்கி படித்தார். அவர் அங்கு மாணவர் தலைவராக விளங்கினார்.

அரசியல் ஆர்வம்
கடந்த 2001ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லிங்கோல்ன் கல்லூரியில் சேர்ந்து தத்துவம், அரசியல், பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார். இந்த நேரத்தில் அவர் கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு அவர் ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். பின்னர் ஒரு வங்கியில் ஆலோசகராக பணியில் சேர்ந்த ரிஷி சுனக், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி தனது திறமையை நிரூபித்தார். மேலும் அவர் இங்கிலாந்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நாராயணமூர்த்திக்கு சொந்தமான கேட்டர்மாரன் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக பணியில் சேர்ந்தார்.

கர்நாடகா மாநில மருமகன்
ரிஷி சுனக்கிற்கும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவிற்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனுஷ்கா, கிருஷ்ணா என 2 மகள்கள் உள்ளனர். தற்போது அவர்கள் இங்கிலாந்தின் யார்க்சைர் நகரில் வசித்து வருகிறார்கள். கடந்த 2014ஆம் ஆண்டு முழுமையாக அரசியல் பிரவேசம் மேற்கொண்ட ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் யார்க்சைர் மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு கருப்பு மற்றும் சிறுபான்மையின மக்களின் தலைவராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் பகவத் கீதை
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலிலும் ரிஷி சுனக் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ரிஷி சுனக் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்ற செய்தி அதிகளவில் பகிரப்பட்டது. தற்போது மீண்டும் அந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்ற ரிஷி சுனக், தனது ஆதரவு பலத்தை நிரூபித்தார். இதையடுத்து அவரை அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டின் பொருளாதார தலைமை செயலாளராக நியமித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற ரிஷி சுனக், இங்கிலாந்து நாட்டின் உயரிய பதவியான கருவூல தலைவராக நியமிக்கப்பட்டார்.

நெருக்கடி காலத்தில் சாமர்த்தியம்
இங்கிலாந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய சமயத்தில் ரிஷி சுனக் திறம்பட பட்ஜெட் தாக்கல் செய்தார். வரி விலக்குகளை அறிவித்தார். கொரோனா காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க காரணமாக இருந்தார்.
இவர் கொரோனா காலத்தில் பணியாளர் தக்கவைப்பு திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க தயங்கியபோதும், ரிஷி சுனக் தனது பொருளாதார யுக்தியால் திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டம் மூலம் கொரோனா காலத்தில் பணிகள் நடைபெறாதபோது அரசும், தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு 80 சதவீத ஊதியத்தை வழங்கின.

நிதியமைச்சர் டூ பிரதமர்
இதன்மூலம் ரிஷி சுனக் இங்கிலாந்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படி பல்வேறு வரலாறுகளை படைத்த ரிஷி சுனக் கடைசியாக இங்கிலாந்து பெண் பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்தார். தற்போது லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு அந்நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications