"இங்கிலாந்து ராணியை விட பணக்காரர்".. லண்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கின் மனைவிக்கு இவ்வளவு சொத்துக்களா
லண்டன்: இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து ராணி எலிசபத்தை விட பணக்காரர் என்றும் அவரை விட அதிக சொத்துக்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியை இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அலங்ககரிக்கப்போகிறார்.
ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ரிஷி சுனக் மனைவி யார்
ஏனென்றால் அவர் பிரதமர் பதவிக்கான ரேசில் கடந்த முறை முன்னிலை வகித்த போது ரிஷி சுனக் மூதாதையர்கள் இந்தியர்கள் என்ற விவரம் வெளிவந்துவிட்டது. ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி இந்தியாவின் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண் மூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதிக்கு ரோகன் மற்றும் அக்ஷதா என இரண்டு பேர் உண்டு.

பள்ளி படிப்பை பெங்களூரில்..
இதில் அக்ஷதா மூர்த்திதான் இங்கிலாந்து பிரதமராக போகும் ரிஷிக் சுனக்கின் மனைவி ஆவார். சுதா மூர்த்தியின் சொந்த ஊரான பெங்களூருவின் ஹூப்ளி நகரில் பிறந்த அக்ஷதா மூர்த்தி, பள்ளி படிப்பை பெங்களூருவில் முடித்தார். அக்ஷதா மூர்த்தி மேல்படிப்புக்காக கலிபோர்னியா சென்றார். கலிபோர்னியாவில் உள்ள பொருளாதாரம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்த அக்ஷதா மூர்த்தி, லாஸ் ஏஞ்சல்சில் பேஷன் டெக்னாலஜியும் முடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு திருமணம்
பிறகு கொஞ்ச காலம் பணியாற்றி விட்டு ஸ்டண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ளார். அப்போதுதான் ரிஷி சுனக்கை சந்தித்து இருக்கிறார். அதன்பிறகு இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து ராணியை விட அதிக சொத்து
அக்ஷதா மூர்த்திக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 700 மில்லியன் டாலர் மதிப்புடைய பங்குகள் உள்ளன. இதன் மூலம் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட பெரும் செல்வந்தராக மாறியிருக்கிறார். அதாவது இங்கிலாந்து ராணியாக இருந்த எலிசபெத் சொத்து மதிப்பு சுமார் 460 மில்லியன் டாலர்தான். இங்கிலாந்தில் Non-Domicile Status எனப்படும் குடியுரிமை இல்லாத அந்தஸ்தில் அக்ஷதா மூர்த்தி இருப்பதால் அவரது வருமானங்களுக்கு இங்கிலாந்தில் வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படாமல் இருந்தது.

சட்ட விதிமீறல் இல்லை
ஆனால், இதற்காகவே அக்ஷதா மூர்த்தி சர்ச்சையிலும் சிக்கினார். ரிஷி சுனக்கிற்கு அரசியல் ரீதியான விமர்சனங்களை இந்த விவகாரம் ஏற்படுத்தி கொடுத்தது. ஆனாலும் இது குறித்து விளக்கம் அளித்த அக்ஷதா மூர்த்தி, "இந்திய சிட்டிசனான நான் இந்த விவகாரத்தில் எந்த ஒரு சட்ட விதி மீறலும் செய்யவில்லை" என்று தெரிவித்து இருந்தார். ரிஷிக் சுனக் - அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆடம்பரமான வாழ்க்கை முறையில் இருப்பதாக அடிக்கடி இங்கிலாந்து ஊடகங்களின் விமர்சனத்திற்கும் இந்த தம்பதிகள் ஆளாகினர்.

17 கோடி ரூபாய் மதிப்பில் நீச்சல் குளம்
கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து கடுமையான வறட்சி மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போது 4 லட்சம் பவுண்ட் (சுமார் 17 கோடி ரூபாய்) மதிப்பில் தனது சொகுசு இல்லத்தில் நீச்சள் குளம் அமைத்ததாக சர்ச்சையில் சிக்கினார். அக்ஷ்தா மூர்த்தி - ரிஷி சுனக் தம்பதிக்கு குறைந்தது 4 ஆடம்பர சொத்துக்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை அக்ஷதா மூர்த்தி தொடங்கி அதையும் நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications