ஆஹா! கிட்டத்தட்ட உறுதிதான் - பிரிட்டன் அரியணையில் முதல் இந்தியர் - யார் இந்த ரிஷி சுனக்?
லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான போட்டி சூடுடிபிடித்து வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டு அரியணையில் அமரப்போவது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை இது நடந்துவிட்டால், பிரிட்டன் பிரதமராக பதவி வகிக்கும் முதல் இந்திய வம்சவாளி நபர் என்ற பெருமை ரிஷி சுனக்குக்கு கிடைக்கும்.
இதனிடையே, பிரிட்டன் பிரதமர் பதவிக்கு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மோர்ட்டான்ட் தீவிரமாக போட்டியிட்டு வருகிறார்.

லிஸ் டிரஸ் ராஜினாமா
பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு ஆளானதால் கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் பதவிக்கு கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனக், லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் முதலில் ரிஷி சுனக்குக்கு ஆதரவு அலை வீசத் தொடங்கினாலும், நாட்கள் செல்ல லிஸ் டிரஸ்ஸுக்கு செல்வாக்கு அதிகமானது. இதையடுத்து, பெரும்பாலான கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் கொண்டு வந்த தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பிரிட்டன் பொருளாதார அதள பாதாளத்துக்கு சென்றது. இதனால் அவருக்கு எதிர்ப்பு அதிகரிக்கவே, வெறும் 45 நாட்களில் பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.

பிரதமராகிறார் ரிஷி சுனக்?
லிஸ் டிரஸ்ஸின் ராஜினாமாவை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. யார் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ, அவரே பிரிட்டன் பிரதமராகவும் பதவியேற்பார். இந்தப் போட்டியில் இந்திய வம்சாளவியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பென்னி மோர்ட்டான்ட் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் போரிஸ் ஜான்சன் திடீரென போட்டியில் இருந்து விலகியதால் ரிஷி சுனக், பென்னி மோர்ட்டான்ட் இடையே மட்டுமே தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களில் ரிஷி சுனக்குக்கு 142 எம்.பி.களின் ஆதரவு உள்ளது. 100 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தாலே பிரதமராக முடியும் என்ற நிலையில், ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிடும் பென்னி மோர்டான்டுக்கு 22 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

நாராயண மூர்த்தியின் மருமகன்
பிரிட்டனில் உள்ள செளத் ஹான்டனில் 1980-ம் ஆண்டு பிறந்தவர் ரிஷி சுனக் (42). பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது தாத்தா - பாட்டி, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 1960-களில் பிரிட்டனில் குடியேறியுள்ளனர். ரிஷி சுனக்கின் தந்தை பெயர் யஷ்வீர் சுனக். தாயார் பெயர் உஷா சுனக். சிறு வயதில் இருந்த படிப்பில் படுசுட்டியான ரிஷி சுனக், பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான ஸ்டான்ஃபார்டு பல்கலைக்கழகம், லின்கான் கல்லூரி, வின்செஸ்டர் கல்லூரி ஆகியவற்றில் முறையே தத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை முடித்தார். கடந்த 2009-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டார்.

அரசியல் வாழ்க்கை..
2001 முதல் 2004-ம் ஆண்டு பேங்க் அனாலிஸ்ட்டாக (Bank Analyst) ரிஷி சுனக் பணியாற்றி வந்தார். பின்னர் தனது மாமனார் நாராயண மூர்த்தி நடத்தி வந்த 'கட்டமரான் வென்ச்சர்ஸ்' நிறுவனத்தின் இயக்குநராக இவர் சிறிது காலம் பணிபுரிந்தார். இதையடுத்து, அரசியல் ஆர்வம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியில் ரிஷி சுனக் இணைந்தார். பின்னர் இவரது நிர்வாகத் திறமைகளை கண்ட கட்சித் தலைவர்கள், கடந்த 2014-ம் ஆண்டு இவரை ரிச்மாண்டு தொகுதியில் எம்.பி. வேட்பாளராக நிறுத்தினர். இந்தத் தேர்தலில் அதீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார் ரிஷி சுனக்.

சாதனை படைத்த நிதியமைச்சர்..
இந்த சூழலில், கடந்த 2019-ம் ஆண்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போரிஸ் ஜான்சனுக்கு ரிஷி சுனக்கின் பொருளாதார திறமைகள் குறித்து தெரியவந்தது. இதையடுத்து, தனது அமைச்சரவையில் ரிஷி சுனக்குக்கு நிதி அமைச்சர் பதவி கொடுத்தார் போரிஸ் ஜான்சன். இவர் நிதியமைச்சராக பதவி வகித்த 3 ஆண்டுகள், பிரிட்டனில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். குறிப்பாக, கொரோனா ஊரடங்கால் முடங்கிப் போன பிரிட்டன் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய பெருமை ரிஷி சுனக்கையே சாரும்.

போரிஸ் ஜான்சனுக்கு முடிவுரை எழுதியவர்
இவ்வாறு நிதி அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்த ரிஷி சுனக்குக்கு, பிரதமர் போரிஸ் ஜான்சனின் நிர்வாகம் மீது அதிருப்தி ஏற்பட்டது. மேலும், போரிஸ் ஜான்சன் மீது அந்த சமயத்தில் பல குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனால் போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலில் தனது நிதியமைச்சர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். ரிஷி சுனக்கின் ராஜினாமாவை அடுத்து பல எம்பிக்களும், அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால்தான் போரிஸ் ஜான்சன் பதவி விலக நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications