ஜெர்மனி பயணம் நிறைவு.. லண்டன் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு
சென்னை: புதிய முதலீடுகளை ஈர்பதற்காக 8 நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இன்று முதல்வர் ஸ்டாலின் லண்டன் சென்றடைந்தார். லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனிலும் முதல்வர் முதலீட்டாளர்களையும் தமிழ் மக்களையும் சந்திக்க உள்ளார்.
தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடந்த 30ஆம் தேதி புறப்பட்டார். முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்களும், எம்.பிக்களும், எம்.எல்.ஏ.க்களும் வழியனுப்பி வைத்தனர். ஜெர்மனியில் உள்ள டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் வந்தடைந்ததும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்
வட ரைன்-வெஸ்ட்ஃபாலியா (என்.ஆர்.டபிள்யூ.) மாகாணத்தின் முதல்வர் ஹென்ட்ரிக் வுஸ்ட் சார்பாக, அவரது அரசின் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசு முறை வரவேற்பு பிரிவின் அன்யா டி. வுஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய தூதரக பொறுப்பாளர் அபிஷேக் துபே மற்றும் பிராங்க்புர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பொறுப்புத் துணைத் தூதர் விபா காந்த் சர்மா ஆகியோர் வரவேற்றனர். ஜெர்மனியில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களும் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இதைத்தொடர்ந்து டசெல்டோர்ஃப்பில் நேற்று (திங்கட்கிழமை) உயர்நிலை முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் ஸ்டாலின் தலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். தொடர்ந்து, ஜெர்மனி டசெல்டோர்ஃப் நகரில் நார் பிரெம்ஸ், நார்டெக்ஸ் குழுமம், இ.பி.எம்.-பாப்ஸ்ட் ஆகிய 3 நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, டசெல்டோர்ஃப் நகரில் உள்ள வட ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநில அதிபர் அலுவலகத்தில், வட ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தின் அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட்டை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் சமூக ரீதியிலும், ஜெர்மனியின் பொருளாதாரத்திலும் உயர் மதிப்பு உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வட ரைன் மாநிலம் ஆகிய இரு பகுதிகளின் தலைமையை ஒன்றிணைத்தது.
லண்டன் சென்றடைந்தார் ஸ்டாலின்
ஹென்ட்ரிக் வுஸ்ட் இடையேயான சந்திப்பின்போது, மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில் 4.0, இரட்டை தொழில் பயிற்சி, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வட ரைன்-வெஸ்ட்ஃபாலியா அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட், அந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை கொண்ட குழுவினையும் தமிழ்நாட்டிற்கு வருமாறு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, இங்கிலாந்துக்கு ஸ்டாலின் சென்றார். லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனிலும் முதல்வர் முதலீட்டாளர்களையும் தமிழ் மக்களையும் சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications