கரண்ட்பில்லைக் குறைக்கணும்.. மாற்றி யோசித்த தந்தை.. ‘வாவ்’ சொல்லும் நெட்டிசன்கள்!
இங்கிலாந்து வங்கி ஊழியரின் மின்கட்டணக் குறைப்பு யோசனை நெட்டிசன்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.
லண்டன்: மின் கட்டணத்தைக் குறைப்பதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது குடும்பத்திற்கு விதித்துள்ள வித்தியாசமான நிபந்தனை நெட்டிசன்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.
நடுத்தர வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளில் முக்கியமானது மின்கட்டணம். இப்போது மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், அதைத் தவிர்க்கவும் முடியாமல், சம்பாதிப்பதில் பெரும்பங்கு மின்கட்டணத்திற்கே போகிறதே என ஆதங்கப்படாமலும் இருக்க முடியவில்லை.
எந்தப் பிரச்சினைக்குமே மாற்றி யோசித்தால் வெற்றி பெறலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்த மின்கட்டணப் பிரச்சினைக்கும் வித்தியாசமான முறையில் தீர்வு கண்டுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர்.

ஷாக் அடிக்கும் கட்டணம்
53 வயதாகும் சாவ்தார் டோடோரோவ் எனும் அந்நபர், வங்கி ஒன்றில் பணி புரிந்து வருகிறார். குடும்பத் தேவைகளுக்கு அந்த வருமானம் மட்டும் போதவில்லை என்பதால், பகுதி நேரமாக டெக்கரேட்டராகவும் வேலை பார்த்து வருகிறார். இப்படி ஓடி ஓடி அவர் சம்பாதிக்கும் பணத்தில் மாதாமாதம் 320 பவுண்ட் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 30 ஆயிரத்தை அவர் மின்கட்டணமாகச் செலுத்தி வந்துள்ளார்.

பிளான் டார்ச்லைட்
மின்கட்டணத்தைப் பார்க்கும் போதெல்லாம், அவரது மனதிற்குள் ஷாக் அடிக்கவே, இதற்கு மாற்று வழியைக் கண்டுபிடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அப்போது அவருக்கு உதித்த யோசனைதான் 'பிளான் டார்ச்லைட்'. அதாவது எளிமையாகச் சொல்வதென்றால், வீட்டில் உள்ள மின்விளக்குகள் எதையுமே பயன்படுத்தாமல் இருப்பது.

நெற்றியில் டார்ச்
அது எப்படி நிஜத்தில் சாத்தியம் என உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அங்குதான் சாவ்தாரின் புத்திசாலித்தனத்தை நாம் பாராட்ட வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் இருட்டில் கஷ்டப்படாமல் இருப்பதற்காக, ஒவ்வொருவரின் முன் நெற்றியிலும் சிறிய டார்ச்லைட்டை வாங்கி மாட்டி விட்டு விட்டார் சாவ்தார்.

கை மேல் பலன்
எனவே, வீட்டில் உள்ளவர்கள் செல்லும் இடத்திற்கெல்லாம், வெளிச்சமும் கூடவே வரும். பார்ப்பதற்கு சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் மாதிரி இந்த ஐடியாவை அவரும், அவரது குடும்பத்தினரும் பின்பற்றி வருகின்றனர். இந்த யோசனை மூலம், அவர்களது மின்கட்டணம் வெகுவாகக் குறைந்துள்ளது. முன்பு 300 பவுண்ட் மின்கட்டணம் கட்டி வந்த இவர்கள், தற்போது 8.48 பவுண்ட் மட்டுமே மின்கட்டணம் செலுத்துகின்றனர்.

சிரமங்கள்
இதனால் ஆண்டிற்கு 3,800 பவுண்ட் பணம் அவர்களுக்கு மிச்சமாகிறதாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3,60,000. சாவ்தாரின் இந்த அடடே யோசனை நெட்டிசன்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது. ஆனாலும் இந்த ஐடியாவில் சில சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் கூறுகிறார் சாவ்தாரின் மனைவி மோடா.

மனைவியின் புலம்பல்
இது குறித்து டெய்லி மெயில் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தலையில் டார்ச்லைட்டை மாட்டிக் கொண்டே சுற்றுவது சிரமமாக இருக்கிறது. அதோடு சமயங்களில் பயமாகவும், பாதுகாப்பில்லாதது மாதிரியும் இருக்கிறது. எனவே வீட்டில் தனியாக இருக்கும்போது என் கணவரின் இந்த வித்தியாசமான யோசனையை நான் பின்பற்றுவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

பிரபலமான சாவ்தார்
சாவ்தார்-மோடா தம்பதிக்கு நிக்கோல்(20), டியோ (14) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தங்களது தந்தையின் இந்த வித்தியாசமான யோசனையால், 18ம் நூற்றாண்டில் மின்சாரம் இல்லாமல் போல் வாழும் உணர்வைப் பெறுவதாகக் கூறியுள்ளனர் இவர்கள். எது எப்படியோ மின்கட்டணத்தைக் குறைத்ததோடு, தனது இந்த யோசனை மூலம் இணையத்திலும் பிரபலமாகி விட்டார் சாவ்தார்.












Click it and Unblock the Notifications