ஓசியில் ஏசி.. சிவப்பு முடிக்கு மட்டுமே இலவசம்.. அடிக்கிற வெயிலுக்கு இப்டி ஒரு ஆஃபரா?
பிரிட்டனில் வெயிலைச் சமாளிப்பதற்காக சினிமா தியேட்டர் ஒன்று வித்தியாசமான சலுகையை வழங்கியுள்ளது இணையத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ஏசி தியேட்டரில் இலவச அனுமதி என்ற சலுகையை அறிவித்து, அதற்கு வித்தியாசமான நிபந்தனையையும் விதித்துள்ளது பிரிட்டன் தியேட்டர் ஒன்று.
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கத்தைவிட இம்முறை அங்கு வெயில் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இன்னமும் அதிகரிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, கோடையின் கொடுமையில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள முடிந்தவரை வீட்டிலேயே இருப்பது நலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வித்தியாசமான ஆஃபர்
ஆனால் வேலை நிமித்தம் வீட்டில் இருந்து வெளியில் வருபவர்களை குளுமை படுத்தும் விதமாக வணிக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளன. வெயிலையே வியாபார யுக்தியாகக் கொண்டு நீச்சல் குளங்கள், உணவகங்கள், மால்கள் போன்றவை சிறப்பு சலுகைகள் பலவற்றையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சினிமா நிறுவனம் ஒன்று அறிவித்துள்ள வித்தியாசமான சலுகை அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஓசியில் ஏசி
அது என்னவென்றால், ஷோகேஸ் என்ற சினிமா நிறுவனம், மக்கள் கோடையில் இருந்து சிறிது நேரம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஏசி தியேட்டருக்குள் அமர்ந்து, பிளாக்பஸ்டர் படத்தை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் இந்த சலுகையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எந்த நாடாக இருந்தாலும் இலவசம் என்றால், மக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னே நிற்பார்கள் அல்லவா..

சிகப்பு முடி மட்டும்
எனவே, இந்த இலவச சினிமாக் காட்சிக்கு என வித்தியாசமான நிபந்தனையையும் விதித்துள்ளது அந்த சினிமா நிறுவனம். அது என்னவென்றால், தியேட்டருக்குள் வரும் நபர்களுக்கு சிவப்பு முடி இருந்தால் மட்டுமே இந்த இலவச கட்டணம் செல்லும். மற்ற நிறமுள்ள முடிகளைக் கொண்ட நபர்களுக்கு சினிமா தியேட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் சிவப்பு முடி மட்டும் என்ற நிபந்தனை எனத் தெரியவில்லை.

ஆச்சர்யத்தில் மக்கள்
எனினும் இந்த வித்தியாசமான அறிவிப்பு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் 40 டிகிரியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், ரயில் சேவைகள்கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தியேட்டரின் வித்தியாசமான ஓசி ஏசி அறிவிப்பு இணையத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications