இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. வர்த்தக பேச்சுவார்த்தையை ரத்து செய்தது பிரிட்டன்! என்ன நடந்தது?
லண்டன்: காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். புதிதாக காசா மீது தாக்குதல் நடத்தினால் அதனை வேடிக்கை பார்க்க மாட்டோம். இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என்று பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் அறிவித்து இருந்த நிலையில், இஸ்ரேலுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக பிரிட்டன் அதிரடியாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் வெடித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என அறிவித்த இஸ்ரேல் தீவிரமாக தாக்குதலை தொடங்கியது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
இதையடுத்து காசா மீது போரை தொடங்கியது இஸ்ரேல். இந்த போர் இடைவிடாமல் 15 மாதங்கள் நடந்து வந்தது. அதன்பிறகு கடந்த பிப்ரவரியில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளையும், ஹமாஸ் பணய கைதிகளையும் விடுவித்தது. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறியதுபோல் பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை என்று மீண்டும் இஸ்ரேல் போரை தொடங்கியது.
இந்த போர் தற்போது மீண்டும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் காசா நகரம் அழிவின் விளிம்பில் உள்ளது. இத்தகைய நிலையில் தான் காசா மீதான புதிய தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இதற்கான புதிய ஆபரேஷனை கடந்த 16 ஆம் தேதி இஸ்ரேல் அறிவித்தது. இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‛‛காசாவை முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க உள்ளது. இதற்கான புதிய ஆபரேஷன் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது'' என்று அறிவித்தார்.
வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்
இஸ்ரேலின் இந்த செயல் அதன் நட்பு நாடுகளையே டென்ஷன் ஆக்கியுள்ளது. இஸ்ரேலின் நட்பு நாடாக அறியப்படும் பிரிட்டன் எச்சரித்து இருந்தது. அதேபோல், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை கடுமையாக எச்சரித்தன. காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக கைவிட வேண்டும். புதிய நடவடிக்கைகளை காசாவில் இஸ்ரேல் தொடங்க கூடாது.
இஸ்ரேல் மக்களுக்கான உதவிகளை தடுக்க கூடாது. மீறினால் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குவோம் என்று பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் திடீரென அறிவித்தது. இத்தகைய சூழலில் தான், இஸ்ரேலுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்துவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. அதுமட்டும் இன்றி இஸ்ரேல் தூதருக்கு சம்மனும் விடுத்துள்ளது.
ஐநா அதிகாரி கவலை
முன்னதாக நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 38க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். கிட்டத்தட்ட காசா நகரே உருக்குலைந்து போனது. காசாவுக்கு உதவி பொருட்கள் வழங்க இஸ்ரேல் விதித்திருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை என ஐநாவின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் பிரிவின் தலைவர் டாம் பிளட்சர் கூறியுள்ளார். காசாவுக்கு அடுத்த 48 மணிநேரத்தில் கூடுதல் உதவிகள் சென்றடைய வேண்டும் எனவும், இல்லையெனில் 14 ஆயிரம் குழந்தைகள் இறக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications