"கஷ்டம் தான்.." லண்டனில் ராகுல் சொன்ன வார்த்தை! பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றி பரபர! பின்னாலேயே விளக்கம் வேற
லண்டன் சென்றுள்ள ராகுல் காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
லண்டன்: காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது பிரிட்டன் சென்றுள்ள நிலையில், அவர் அங்கு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி நாடு முழுக்க பாத யாத்திரையை முடித்திருந்த நிலையில், அப்போது அவர் பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு லண்டனில் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
முதலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது அவரது பேச்சு இந்தியாவை அவமானப்படுத்தும் வகையில் இருந்தாக கூறி, பாஜக விமர்சித்திருந்தது. இதற்குப் பிரதமர் மோடி செய்யாததைத் தான் செய்யவில்லை என்று கூறி ராகுல் காந்தி பதிலடி கொடுத்திருந்தார்.

பிரிட்டன் நாடாளுமன்றம்
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லண்டனில் இருக்கும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றினர். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கிராண்ட் கமிட்டி ரூமில் அந்நாட்டு எம்பிக்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய 90 விருந்தினர்களைக் கொண்ட கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவில் எம்பியாக இருப்பது கடினம் என்று குறிப்பிட்டார். மேலும், கடந்தாண்டு செப். முதல் ஜனவரி வரை அவர் மேற்கொண்ட 3500 கிமீ நீள பாரத் ஜோடோ யாத்திரையின் அனுபவங்களையும் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார்.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "நான் முதலில் அரசியலுக்கு வந்த போது.. இந்தியா மற்றும் அரசியல் குறித்து எனக்கு ஒரு குறிப்பிட்ட பார்வை இருந்தது. அந்த நாட்களில், எந்த இந்தியனும் தன்னால் சொல்ல விரும்புவதைச் சொல்ல முடியும் என்று நான் நம்பினேன். ஆனால், இப்போது அங்கு நிலைமை அப்படியில்லை. முற்றிலும் சுதந்திரமாகவும் இருந்த உரையாடல்கள் இப்போது அடக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக
நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகள் ஊடுருவி வருகின்றன. அவர்கள் இந்த நிறுவனங்களை தங்களுக்கு ஏற்றார் போல மாற்றுகின்றனர். இதனால் உரையாடல்கள் சாத்தியமில்லாமல் போகிறது. அதனால்தான் நான் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டேன். இந்தியாவில் மீண்டும் சுதந்திரமான பேச்சுரிமை தேவை என்பதை வலியுறுத்தியே எனது யாத்திரை அமைந்தது.

நம்ப மாட்டேன்
பாஜகவை யாராலும் வெல்ல முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.. காங்கிரஸ் கட்சி என்பது ஒரு சித்தாந்தம். பாஜகவை விடப் பல ஆண்டுகள் நாங்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளோம். பாஜகவை யாராலும் வெல்ல முடியாது என்பது திட்டமிட்டு ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு கருத்து.. ஊடகங்களில் வரும் இந்த கதைகளை நான் கேட்பதில்லை. களத்தில் இருக்கும் மக்கள் சொல்வதையே நான் கேட்கிறேன்.

பிரிட்டன் எம்பி விளக்கம்
உலகில் இந்தியாவுக்கு முக்கியமான இடம் உள்ளது என்று கூறினார். இப்போது நிலவும் கொந்தளிப்பைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார். இதனிடையே ராகுல் காந்தியின் கருத்துகள் தனிப்பட்ட கருத்துகள் என்றும் அவரது கருத்துகள் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் பிரிட்டன் எம்பி விரேந்திர சர்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications