விட்டுக்கொடுக்க சொல்லும் போரிஸ்.. விடாமல் மறுக்கும் ரிஷி! பிரிட்டன் பிரதமர் ரேசில் முந்துவது யார்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு ரிஷி சுனக்கிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போரிஸ் ஜான்சன் சில மாதங்களுக்கு முன்பு பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே போட்டி நிலவியது.
ரிஷி சுனக்கிற்கு முதலில் ஆதரவு இருந்தாலும் கூட லிஸ் டிரஸின் வரி குறைப்பு திட்டம் நிலைமையை மாற்றியது. இதையடுத்து லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்,

ராஜினாமா
இதையடுத்து கடந்த மாதம் தான் லிஸ் டிரஸ் பிரதமர் ஆனார். இருப்பினும், இவர் எடுத்த நடவடிக்கைகள் பிரிட்டன் பொருளாதாரத்தைப் பாதித்து. குறிப்பாக வரி குறைப்பு என்பது நெகடிவ் பாதிப்புகளையே ஏற்படுத்தியது. இதனால் இரு அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கட்சிக்குள்ளும் அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி நேற்று முன்தினம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடும் போட்டி
இதையடுத்து மீண்டும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது. பிளவுபட்ட கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்த வேண்டும் என்றால் அதற்கு மிகப் பெரிய திறமை தேவை. பென்னி மோர்டான்ட் தான் பிரதமர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான மோர்டான்ட், போரிஸ் ஜான்சனை மாற்ற வேண்டும் என்று வலுவாகக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் ஆவார். இருப்பினும் அப்போது அவரால் வெல்ல முடியவில்லை.

போரிஸ் ஜான்சன்
இவர் இப்போது ஒரு பக்கம் மீண்டும் களமிறங்கி உள்ள போதிலும், உண்மையில் போட்டி என்பது ரிஷி சுனக் இடையே தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. லிஸ் டிரஸ் பதவி விலகிய உடனே விடுமுறையைப் பாதியில் முடித்துக் கொண்டு லண்டன் திரும்பி உள்ளார் போரிஸ் ஜான்சன். அவரும் பிரதமர் ரேஸில் மீண்டும் இறங்கத் தயாராகி வருகிறார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விட்டுக்கொடுங்கள்
லிஸ் டிரஸ் இப்போது பதவி விலகி உள்ள நிலையில், தற்போதைய சூழலில் ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு இருப்பது போலவே தெரிகிறது. இருப்பினும், போரிஸ் ஜான்சன் கட்சியைக் காப்பாற்ற ரிஷி சுனக் விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கோரியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக போரிஸ் ஜான்சன் பதவி விலகிய போது, பிரதமர் ரேசில் ரிஷி சுனக் முன்னிலையில் இருந்தார். அப்போது ரிஷி சுனக் தவிர வேறு யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆனால் பரவாயில்லை என்று போரிஸ் ஜான்சன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எத்தனை பேருக்கு ஆதரவு
முதற்கட்ட தேர்தல் திங்கள்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சுற்றில் போட்டியிடக் குறைந்தது 100 எம்பிக்களின் ஆதரவு தேவை. ரிஷி சுனக்கிற்கு ஏற்கனவே ரிஷி சுனக் 100 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. இதனால் அவர் போட்டியிடுவது உறுதி. பென்னி மோர்டான்ட்டுக்கு 22 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதேபோல 48 எம்பிக்கள் மட்டுமே போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவு தருகிறார்கள்.

எதிர்ப்பு
மொத்தம் 357 எம்பிக்கள் உள்ள நிலையில், பென்னி மோர்டான்ட்டும் போரிஸ் ஜான்சனும் தங்கள் ஆதரவை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காகவே போரிஸ் ஜான்சன் விடுமுறையைப் பாதியில் முடித்துக் கொண்டு லண்டன் திரும்புகிறார். இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானால் அது கன்சர்வேட்டிவ் கட்சியின் அழிவுக்கு வித்திடும் என்று பல எம்பிகள் கருதுகின்றனர்.

ஆதரவாளர்கள் கருத்து
அதேநேரம் பல்வேறு கருத்துகளைக் கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்த போரிஸ் ஜான்சனால் மட்டுமே முடியும் என்பது அவரது ஆதரவாளர்களின் கருத்து. இதனால் அவர் ரிஷி சுனக்குடன் போட்டியைத் தவிர்க்கும் வகையில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளதால் அடுத்த இரு ஆண்டுகளுக்குத் தேர்தல் நடைபெறாது. இதனால் போரிஸ் ஜான்சனை பிரதமராக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து.

ரேஸில் முந்தும் ரிஷி சுனக்
திங்கட்கிழமைக்குள் 100 எம்பிக்களின் ஆதரவுடன் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தால் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இப்போது ரிஷி சுனக்கிற்கு மட்டுமே 100 எம்பிக்களின் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் களத்தில் இருந்தால், வாக்கெடுப்பு மூலம் பிரதமர் தேர்வு செய்யப்படுவார். வரும் அக்டோபர் 28க்குள் அங்கு புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
