"கருப்பை தொழிற்சாலை.." இந்த விளையாட்டு வேண்டவே வேண்டாம்! மனித இனத்தையே அழிக்கும்! ஆய்வாளர்கள் பகீர்
லண்டன்: கருப்பை தொழிற்சாலை குறித்த விளக்க வீடியோ கடந்த வாரம் இணையத்தில் வெளியாகி மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்தச் சூழலில் அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து சில ஆய்வாளர்கள் பகீர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வாளர்கள் பயோபோக் என்ற செயற்கை கருப்பையில் எட்டு ஆட்டுக் குட்டிகளை வெற்றிகரமாகப் பிறக்க வைத்தனர். அதேபோல கடந்த 2012 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய விஞ்ஞானிகள் பயோபேக் மூலம் எலிகளை உற்பத்தி செய்தனர்.
இதன் மூலம் எலியின் கற்ப காலம் 22 நாட்களில் இருந்து 11 நாட்களாகக் குறைத்ததாகக் கூறப்படுகிறது. இது அறிவியல் உலகில் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. கருப்பையில் தான் புதிய உயிர் வளர முடியும் என்ற நிலையை இது தலைகீழாகவே மாற்றிவிட்டது.

கருப்பை தொழிற்சாலை
இந்த கான்சப்ட் தான் இப்போது அடுத்த லெவலை எட்டியுள்ளது. உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோல குழந்தைகளையும் பெற்றெடுக்கும் ஆய்வுகளைத் தீவிரமடைந்துள்ளது. இதை விளக்கி அல்-கைலி என்பவர் விளக்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த கருப்பை தொழிற்சாலை மூலம் ஆண்டுக்கு 8,000 குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ பலரையும் வியக்க வைத்தது. அதேநேரம் சர்ச்சையையும் கிளப்பியது. சர்ச்சையைப் பின்னர் பார்க்கலாம். முதலில் அந்த வீடியோவில் என்ன கூறினார்கள் என்பதைப் பார்க்கலாம்.

அதிநவீன தொழில்நுட்பம்
அதாவது புதிய குழந்தைகளை உருவாக்கக் கருப்பை தொழிற்சாலை போன்ற ஒன்றை உருவாக்குவதே இவரது திட்டம். ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைவது மட்டுமே இதில் இருக்கும் ஒரே வழக்கமான செயல். இதைத் தவிர மற்ற அனைத்துமே தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கருவைச் சுமக்கச் செயற்கையாக ஒரு கருவியை உருவாக்க உள்ளன. growth pods என்று அழைக்கப்படும் இதில் தாயின் கருப்பையில் இருக்கும் அதே சூழல் உருவாக்கப்படும். இதனால் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளரும். இந்த கரு பெண்களின் வயிற்றில் இருப்பதைப் போன்ற செயற்கை அம்னோடிக் திரவத்தில் வளரும்..

ஜீன் எடிட்டிங்
செயற்கையாக உருவாக்கப்பட்ட தொப்புள் கொடியின் மூலம் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஹார்மோன்கள், ஆன்டிபாடிகள் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான புரதங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை கருவுக்கு அனுப்பப்படும். மற்றொரு குழாய் மூலம் கருவில் இருந்து வெளியே வரும் கழிவுப் பொருட்கள் அகற்றப்படும். மேலும், இப்போது ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நிலையில், பெற்றோரால் குழந்தையின் குணாதிசயங்களையும் இதில் தேர்ந்தெடுக்க முடியும். குழந்தை வளரும் 9 மாதங்களும் அது எப்படி இருக்கிறது என்பதைப் பெற்றோரால் டிராக் செய்ய முடியும்.

சத்தான குழந்தைகள்
இதற்காக ஒரு செயலியையும் அவர் உருவாக்க உள்ளாராம். இதன் மூலம் பெற்றோர் எங்கு இருந்தாலும் அங்கிருந்தபடி குழந்தையின் உடல்நிலையை செக் செய்து கொள்ள முடியும். கற்ப காலத்தில் தாய்மார்கள் படும் துன்பத்தைக் குறைக்கவே இதை உருவாக்கியுள்ளதாக அல்-கைலி தெரிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் பிரசவத்தின்போது, சுமார் 3 லட்சம் பெண்கள் உயிரிழக்கும் நிலையில், அது தடுத்து நிறுத்தப்படும். மேலும், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.

குழந்தையின்மை
அனைத்தையும்விட இப்போது குழந்தையின்மை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கும் முக்கிய தீர்வாக அமையும், உலகெங்கும் சுமார் 15% தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேபோல பெண்கள் வேலைக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் பல நாடுகளில் மக்கள்தொகை பெருக்கும் குறைந்துள்ளது. குறிப்பாக ஜப்பான் உட்பட 23 நாடுகளில் மக்கள்தொகை பெருக்கும் ஆபத்தான நிலையில் உள்ளது.

ஆய்வாளர்கள் பகீர்
இந்த நாடுகளுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கைலி தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஒரே இடத்தில் ஆண்டுக்கு 8000 குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். பெற்றோர் விரும்பும் நேரத்தில் விரும்பும் நாளில் ஒரு பட்டனை அழுத்தி, குழந்தையைப் பெற்றெடுக்கலாம். மேலும், ஒரு குழந்தை பெற்றெடுத்த பிறகு மீண்டும் அதே podஐ பயன்படுத்தி எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றெடுக்க முடியும். இதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும் கூட மற்றொரு தரப்பினர் மிகக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

ஒரே போன்ற குழந்தைகள்
இந்த தொழில்நுட்பம் இப்போது தொடக்க நிலையில் இருந்தாலும் கூட இப்போதே இதைப் பலரும் எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பலதரப்பட்ட மக்களைக் கொண்டது தான் மனித இனம். இப்படி பல்வேறு தரப்பினரையும் கொண்டிருப்பதாலேயே மனித இனம் இத்தனை காலம் அனைத்து பிரச்சினைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தப்பிப் பிழைக்க முடிந்தது. ஆனால், இப்படி பாட்கள் மூலம் குழந்தைகளை உருவாக்கினால் அந்த நிலை மாறும்.

மனித இனத்தை அழிக்கும்
அனைவருமே ஒரே வகையில் குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புவார்கள். இதனால் சிறு இயற்கை பேரிடர் வந்தாலும் மனித இனமே காணாமல் போகிவிடும். அதாவது அனைத்து குழந்தைகளும் ஒரே சூழலில் வளர்க்கப்படுவதால், சிறு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டாலும் அவை மிக எளிதாக அனைவரையும் அழித்துவிடும்" என்று எச்சரிக்கின்றனர். மேலும், இது குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கும் பிணைப்பைக் கூட பாதிக்கும் எனச் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி, தாய்ப்பால் உள்ளிட்ட பல விஷயங்களில் இதில் பிரச்சினை வரும் என்றும் இது மனித இன அழிவின் தொடக்கப் புள்ளியாக அமைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications