1900 நாட்கள் சிறைக்கு பின்.. விக்கி லீக்ஸ் நிறுவனர் விடுதலை! அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்டவர்
லண்டன்: அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை இணையத்தில் கசியவிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிட்டன் சிறையில் இருந்து வந்தார். இதற்கிடையே தனது தவறை ஒப்புக் கொண்ட நிலையில், அவர் இப்போது விடுதலை செய்யப்பட்டுளார். அவர் தனி விமானம் மூலம் பிரிட்டன் நாட்டில் இருந்து வெளியேறினார்.
கடந்த 2010இல் அமெரிக்காவின் பல ராணுவ ரகசியங்கள் இணையத்தில் கசியவிட்டவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. அமெரிக்கா இவர் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு இவர் பிரிட்டன் நாட்டில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

ஈக்வடார் அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. ஜூலியன் அசாஞ்சசே இப்போது கைது செய்ய அனுமதித்தால் மனித உரிமை மீறல் நடைபெறலாம் என கூறி அடைக்கலம் கொடுத்திருந்தது.
ஜூலியன் அசாஞ்சே: இதையடுத்து ஜூலியன் அசாஞ்சே சில ஆண்டுகள் அங்கேயே இருந்து வந்தார். இருப்பினும், கடந்த 2019இல் அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதையடுத்து அப்போதே பிரிட்டன் போலீசார் அவரை கைது செய்தனர். அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக அவர் தெற்கு லண்டனில் உள்ள சிறையில் இருக்கிறார்.
அமெரிக்காவை உளவு பார்த்தது.. அமெரிக்க ராணுவ ரகசியங்களைத் திருடியது உட்பட 15க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை ஜூலியன் அசாஞ்சசே மீது அமெரிக்க அரசு சுமத்தி இருந்தது. இதனால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் பிரிட்டனின் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த கடந்த 2022ஆம் ஆண்டு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
விடுதலை: இருப்பினும், ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு அங்கே மரண தண்டனை விதிக்கப்படாது என்பதை அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்று ஜூலியன் அசாஞ்சே தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே தான் செய்த தவறை ஒப்புக் கொண்டதால் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் உள்ள பெல்மார்ஷ் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.. தவறை ஒப்புக் கொண்டதால் அமெரிக்காவும் அவருக்குக் குறைவான தண்டனையை வழங்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏன்: இதை விக்கி லீக்ஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் தங்கள் ட்விட்டரில், "ஜூலியன் அசாஞ்சே விடுதலையானார். 1901 நாட்கள் சிறையில் கழித்த பின்னர், பெல்மார்ஷ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்" என்று பதிவிட்டு இருந்தது. லண்டன் உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்த நிலையில், அவர் விடுதலையானார்.
52 வயதான அவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் நாளை மதியம் அமெரிக்காவில் ஆஜராக வேண்டும். அங்கே அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஜூலியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே ஜூலியன் பிரிட்டனில் 60 மாதங்கள் அதாவது 5 ஆண்டுகள் இருந்துவிட்ட நிலையில், அது கழிக்கப்படும். எனவே, அவர் இனிமேல் சிறையில் இருக்கத் தேவையில்லை. இதனால் அவர் விரைவில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளார்.
பின்னணி என்ன: கடந்த 2010இல் ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட போர்களில் அமெரிக்காவின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து வெளியிட்டவர் தான் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. அவர் வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவுக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து சீக்ரெட் தகவல்களை வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. வெளிநாட்டில் இருந்த அவரை பிடிக்க அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில், அவர் பிரிட்டன் நாட்டில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த 2012இல் தஞ்சம் புகுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications