ஜாக்பாட்.. 1.25 கோடி குடும்பத்துக்கு டிசம்பருக்குள் பட்டா நிலம்.. யோகி ஆதித்யநாத் இலக்கு
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 1.25 கோடி குடும்பங்களுக்கு பிரதம மந்திரி ஸ்வாமித்வா யோஜனா திட்டத்தின் கீழ் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் உரிமைப்பத்திரம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அலிகாரில் உள்ள நுமைஷ் மைதானத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த மக்களுக்கான மாநாடு நடந்தது. இதில் யோகி ஆதித்யநாத் பங்கேற்று ரூ.497 கோடி மதிப்பிலான 208 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்கள் உத்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பொருளாதார முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
அதேவேளையில் சமூகத்தில் பின்தங்கியவர்களின் வளர்ச்சி, அவர்களின் பொருளாதாரம் உயர்வது என்பது மிகவும் முக்கியமாகும். 2017 ம் ஆண்டுக்கு முன்பு மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி மக்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டனர். ஆனால் மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் பாஜக ஆட்சி வந்தவுடன் இரட்டை என்ஜின் அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக நெருக்கடி நிலையில் இருந்து அவர்கள் மீண்டு வருகின்றனர்.
அம்பேத்கரின் நல்லிணக்க சிந்தனையை சமூகத்தில் உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான பட்டா நிலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 75 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதத்துக்கு இந்த எண்ணிக்கை என்பது 1.25 கோடி குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஸ்வாமித்வா யோஜனா திட்டத்தின் கீழ் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் உரிமைக்கான உரிமை பத்திரம் வழங்கப்படும். மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நிலம் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications