உ.பியில் பிலாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்பட்ட விவகாரம்.. 10 பேர் கைது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பிலாஸ்மாவுக்கு' பதில் 'சாத்துக்குடி' ஜூஸ் உடலில் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 10 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், குற்றத்தில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான மருத்துவமனைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்துக்குடி ஜூஸ்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜின் குளோபல் மருத்துவமனையில் ரத்தம் பெற்றுக்கொண்டிருந்த டெங்கு நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமாக இம்மாதிரியான உயிரிழப்புகள் நடக்கும் என்றாலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர். அதாவது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள 'பிளாஸ்மா' வழங்கப்படுவதற்கு பதில் சாத்துக்குடி சாறு கொடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சீல் வைப்பு
இது தொடர்பாக வீடியோ எடுத்துள்ள நபர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறிய ஒரு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை சீல் வைக்கப்பட்டுள்ளது.

கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளனர். தாங்கள் பிலாஸ்மாவை மட்டுமே விற்பனை செய்ததாக உறுதியாக கூறுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆய்வு முடிவுகள் வெளிவந்தால் மட்டுமே உண்மை தெரிய வரும் என காவல்துறை உயர் அதிகாரி ஷைலேஷ் பாண்டே கூறியுள்ளார். மேலும், "சமீப நாட்களாக டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பிலாஸ்மாவின் தேவையும் அதிகரித்துள்ளது.

தொடர்கதை
இதனை பயன்படுத்தி ஏழை மக்களிடம் இவர்கள் அதிக அளவில் பணத்தை வசூல் செய்து வருகிறார்கள். எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நாங்கள் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்." எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் சட்டவிரோதமாக ரத்தம் விற்பனை செய்யப்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து தற்போது பிலாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஏன் பிலாஸ்மா தேவை?
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களின் ரத்த தட்டணுக்கள் (பிலாஸ்மா) எண்ணிக்கை குறைய தொடங்கிவிடும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 3 லட்சம் ரத்த தட்டணுக்கள் இருக்கும். ஆனால், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் சரிய தொடங்கும். இதனை தடுக்க ரத்த தட்டணுக்கள் கொண்ட ரத்தத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றத் தவறினால் நுரையீரல் பகுதியில் நீர் தேங்கும். இது உயிரிழப்பை ஏற்படுத்திவிடும் இதனை 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications