அடுத்த 4 ஆண்டுகளில்.. 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. உ.பி. முதல்வர் யோகி அதிரடி
"இந்த திட்டத்தின் மூலம் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவரவர் சார்ந்த துறைகளில் முன்னணி தொழில் நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்"
லக்னோ: உத்தபிரதேசத்தில் உள்ள 2 கோடி இளைஞர்களுக்கு அடுத்த 3 - 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை அனைத்து நிலைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக கொண்டு வர முதல்வர் யோகி ஆதித்யநாத் சூளுரைத்துள்ளார். அந்த வகையில், அங்கு பல்வேறு திட்டங்களை உபி அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களும், கல்வி தரத்தை உயரத்தும் திட்டங்களும் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள முக்கிய தொழில் பகுதிகள் அனைத்தையும் இணைக்கும் சாலைகளும், மேம்பாலங்களும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு மாநிலத்தில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்பதை உணர்ந்து இந்த திட்டங்களை உபி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில், மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார். மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் பயிற்சி வழங்கும். ஏற்கனவே, உபியில் உள்ள ஐடிஐ மாணவர்களுக்கு டாடா குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு பயிற்சி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இது கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான புதிய திட்டம் ஆகும்.
இந்நிலையில், இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது, இந்த திட்டத்தால் என்ன நடந்துவிட போகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தார். ஆனால், இன்றைக்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் இத்திட்டத்தால் பயனடைந்து வேலைவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், இந்த திட்டத்துடன் சேர்த்து உபி அரசு 'ரோஜ்கார்' என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவரவர் சார்ந்த துறைகளில் முன்னணி தொழில் நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

இதனால் படிப்பை முடிக்கும் போதே மாணவர்கள் அந்தந்த துறை சார்ந்த தொழில்களையும் கற்றுத் தேர்ந்துவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 - 4 ஆண்டுகளில் 2 கோடி உபி இளைஞர்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.












Click it and Unblock the Notifications