ஆர்.எஸ்.எஸ்., எமர்ஜென்சி, மண்டல் கமிஷன், பாபர் மசூதி இடிப்பு... பாஜகவின் மகத்தான ஆளுமை கல்யாண்சிங்!
லக்னோ: பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மகத்தான ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த முதுபெரும் தலைவர் கல்யாண்சிங். இந்துத்துவா இயக்கங்களின் போஸ்டர் ஒட்டும் பையனாக வாழ்க்கையை தொடங்கி ஆளுநர் பதவி வரை அரசியலில் அனைத்து உச்சம் தொட்டவர் மறைந்த கல்யாண்சிங்.
உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முதன் முதலில் ஆட்சியில் அமர்த்திய பெருமைக்குரியவர் கல்யாண்சிங். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். 1967ம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தின் சார்பில் உ.பி. Atrauli தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக எம்.ஏல்.ஏ.வானார். இதே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு 9 முறை வென்றவர் கல்யாண்சிங்.
தொடக்கத்தில் சிறிது காலம் மல்யுத்த வீரராக பின்னர் அரசு பள்ளி ஆசிரியராக இருந்த கல்யாண்சிங் தீவிர அரசியலில் குதித்து உ.பி. இந்துத்துவா அரசியலின் முகமாக உருவெடுத்தார். 1975-ல் இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தை பிறப்பித்த போது கல்யாண்சிங் கைது செய்யப்பட்டு 21 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். 1977-ல் உ.பி.யில் ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அத்வானியும் ராமர் கோவில் இயக்கமும்
பின்னர் பாரதிய ஜன சங்கம் என்பது 1980களில் பாரதிய ஜனதா கட்சியாக மாறியது. அப்போது விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கம்தான் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்தது. இதனை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்தது. ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்தை முதுபெரும் தலைவரான எல்.கே. அத்வானி முன்னெடுத்தார். அப்போது பாஜக ஆதரவுடன் பிரதமராக இருந்த வி.பி.சிங், மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். அப்போது பா.ஜ.க. இதனை கடுமையாக எதிர்த்தது. இதனால் வி.பி.சிங். ஆட்சியும் பறிபோனது.

கல்யாண்சிங்கும் பாபர் மசூதி இடிப்பும்
அத்வானி முன்னெடுத்த ராமர் கோவிலுக்கான இயக்கம் பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் ரீதியாக பெரும் வலிமையை கொடுத்தது. 1991-ல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. உ.பி.முதல்வராக கல்யாண்சிங் பதவியேற்றுக் கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பாபர் மசூதி இருந்த இடத்துக்கு அருகே 2.77 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதியை இந்துத்துவா தொண்டர்கள் இடித்து தரைமட்டமாக்க தேசம் எங்கும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாபர் மசூதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த கல்யாண்சிங், பாபர் மசூதி இடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். பாபர் மசூதி இடித்து முடிக்கப்பட்ட உடனேயே தமது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் கல்யாண்சிங். அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, உ.பி. மாநில அரசை டிஸ்மிஸ் செய்தது.

பாஜகவில் உள்ளே வெளியே
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கல்யாண்சிங்கும் சேர்க்கப்பட்டார். தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் முன்பாக பாபர் மசூதி கட்டிடத்துக்கு பாதுகாப்பு தருவதாக கூறிய கல்யாண்சிங், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார்; பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தவர் கல்யாண்சிங் என சி.பி.ஐ. தமது குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டியிருந்தது. 1993 உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக தோற்றது. 1997-ல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் முதல்வர் பதவியை 6 மாதங்களுக்கு பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் போட்டார் கல்யாண்சிங். மாயாவதியோ 6 மாதம் முதல்வர் பதவியில் இருந்துவிட்டு பாஜகவுக்கான ஆதரவை திரும்பப் பெற்றதால் கொதிப்படைந்தார் கல்யாண்சிங். 1999-ல் பாஜக தலைமையுடன் மோதியதாக் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் கல்யாண்சிங். பின்னர் ராஷ்டிரிய கிராந்தி தள் என்கிற தனிக்கட்சியை உருவாக்கினார். ஆனால் 2004 லோக்சபா தேர்தலின் போது மீண்டும் பாஜகவுக்கே திரும்பினார் கல்யாண்சிங்.

பாஜகவின் சகாப்தம்
2009-ல் மீண்டும் பாஜகவை விட்டு வெளியேறி 2வது முறையாக தனிக்கட்சி தொடங்கினார். அந்த கட்சியையும் நீண்டகாலம் நடத்தாமல் 2014-ல் மீண்டும் பாஜகவுக்கே திரும்பினார் கல்யாண்சிங். அவரது ஆட்சிக் காலத்தில்தான் உ.பி.யில் Yes Sir- Yes Madam என்பதற்கு பதிலாக வந்தேமாதரம் என சொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் 2-வது முறை உ.பி. முதல்வராக பதவி வகித்த போது ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்தினர் மீது போடப்பட்ட அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. உ.பி., ம.பி. அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றான லோத் எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கல்யாண்சிங். என்னதான் பாஜக ஆதிக்க ஜாதியினர் கட்சி என அறியப்பட்டாலும் அந்த கட்சியின் ஓபிசி முகமாக திகழ்ந்தவர் கல்யாண்சிங். 2014-ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் ஆளுநராக பதவி வகித்தார். 5 ஆண்டுகாலம் ஆளுநர் பதவியை முழுமையாக நிறைவு செய்தவர்களில் கல்யாண்சிங்கும் ஒருவர். பாஜகவின் அரசியல் வரலாற்றில் கல்யாண்சிங் ஒரு சகாப்தம் என்பதில் மிகையில்லை.
கொண்ட கொள்கையை ஏற்று அதை நிறைவேற்றுவதில் முனைப்பும் தீவிரமும் காட்டி இழப்புகளையும் எதிர்கொண்ட கல்யாண்சிங் மகத்தான ஆளுமைதான்!












Click it and Unblock the Notifications