எங்கே செல்லும் இந்த பாதை? அயோத்தி ராமர் கோவில் செல்கிறார் ரஜினிகாந்த்- காசி, மதுராவிலும் வழிபாடு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகாமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை அயோத்தி ராமர் கோவிலில் வழிபாடு நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவில், மதுரா கிருஷ்ணஜென்மபூமி ஆகிய இடங்களுக்கும் சென்று ரஜினிகாந்த் வழிபாடு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் ரூ450 கோடிக்கும் மேல் ஜெயிலர் படம் வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் திரைப்படம் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனா ஜெயிலர் திரைப்படம் வெளியான போது ரஜினிகாந்த் வழக்கம் போல இமயமலை பயணம் மேற்கொண்டார். ரிஷிகேஷில் முகாமிட்டபடி இமயமலையில் பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார் ரஜினிகாந்த்.
இமயமலை யாத்திரையை நிறைவு செய்த ரஜினிகாந்த் தற்போது வட இந்திய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சென்ற ரஜினிகாந்த் அங்கு ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து தற்போது உத்தரப்பிரதேசத்தில் ரஜினிகாந்த் முகாமிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் இன்று ஜெயிலர் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்படுகிறது. இந்த சிறப்பு காட்சியை முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து பார்ப்பேன் என ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சிறப்பு காட்சிக்கு வரவில்லை என கூறிவிட்டாராம். இதனால் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை அனுப்பி வைக்கிறாராம் யோகி ஆதித்யநாத்.
லக்னோவில் ஜெயிலர் சிறப்பு காட்சி முடிவடைந்த பின்னர், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறாராம் நடிகர் ரஜினி. இதனைத் தொடர்ந்து மதுரா சென்று கிருஷ்ண ஜென்மபூமியில் வழிபாடு நடத்த உள்ளாராம் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் பொதுவாக ஆன்மீகவாதியாக அறியப்பட்டவர். அதேநேரத்தில் பாஜகவுடன் மிகவும் நெருக்கமானவர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்; தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டதை தமிழ்நாடு பாஜக மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தது. ஆனாலும் பாஜக தொடர்பாக அவ்வப்போது நிலையற்ற கருத்துகளை ரஜினிகாந்த் கூறிவந்தார். இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் நெருக்கமான, இணக்கமான உறவை கடைபிடித்தார் ரஜினிகாந்த்.
அயோத்தி ராமர் கோவில் வழக்கில் 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அயோத்தி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்கிறேன். இந்தத் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ரஜினிகாந்த் கூறியிருந்தார். தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று வழிபாடு நடத்துவது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications