கோட்சே வழியில் சுட்டுக்கொலை.. ஆதிக் அகமது கொலையாளிகள் மீது ஏன் உபா பாயவில்லை! ஓவைசி ஆக்ரோஷம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 22 வினாடியில் 15 முதல் 20 முறை துப்பாக்கியால் சுட்டு போலீஸ் கஸ்டடியில் இருந்த முன்னாள் எம்பி ஆதிக் அகமது, மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கொலையாளிகள் மீது உபா சட்டம் பாயவில்லை என கேள்வி எழுப்பிய அவர் கொலையாளிகளை பயங்கரவாதிகளாகவும், கோட்சேவின் வழியில் நடந்துள்ளதாகவும் கூறி விவாதத்தை கிளப்பி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் பகுதியை சேர்ந்தவர் ஆதிக் அகமது. இவரது சகோதரர் அஷ்ரப். ஆதிக் அகமது 5 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாவும் இருந்துள்ளார். இவர் சமாஜ்வாதி மற்றும் அப்னா தளம் கட்சியில் செயல்பட்டு வந்தார். மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்த வாரணாசி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கி தோல்வியும் அடைந்தார்.

இவர் மீது கொலை, கொள்ளை, கொலை மிரட்டல் என ஏராளமான வழக்குகள் இருந்தன. அதாவது ஆதிக் அகமது மீது 100க்கும் அதிகமான வழக்குகள் இருந்தன. இதற்கிடையே தான் அவர் கடந்த 2019 ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டார். பியக்யாராஜ் சிறையில் அவர் இருந்து வந்தார். மேலும் அவர் சிறையில் இருக்க பிற வழக்குகளில் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வந்தன.
இந்நிலையில் தான் ஆதிக் அகமது அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் இரவில் பிரக்யாராஜ் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது பத்திரிகையாளர் போல் வந்த 3 பேர் அவர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். வெறும் 22 வினாடியில் 15 முதல் 20 முறை துப்பாக்கியால் சுட்டனர். மேலும் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டனர்.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்ந்து பிரச்சனையை கிளப்பி வருகிறது. போலீஸ் கஸ்டடியில் இருக்கும் 2 பேரை துப்பாக்கியால் சுட்ட 3 பேரை போலீசார் ஏன் சுட்டு பிடிக்கவில்லை என பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதேபோல் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி தொடர்ந்து இந்த சம்பவத்தை எதிர்த்து வருகிறார். இதுதொடர்பாக அவர் தற்போது கூறியுள்ளதாவது: ‛‛போலீஸ் கஸ்டடியில் ஆதிக் அகமது சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் கொலையாளிகள் மீது ஏன் இன்னும் உபா சட்டம் பாயவில்லை. இது ஆச்சரியமாக உள்ளது. இந்த படுகொலையை செய்தவர்கள் பயங்கரவாதிகளை போலவும், பயங்கரவாத குழுவை போலவும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் பலரை கொல்லலாம்.
ஆனாலும் அவர்கள் மீது ஏன் உபா சட்டம் பாயவில்லை?. கொலையாளிகளுக்கு துப்பாக்கி கொடுத்தது யார்? ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெப்பன்ஸ் கொடுத்தது யார்?. இவர்கள் பயங்கரவாதிகளாகவும், கோட்சேவின் வழியிலும் செல்கிறார்கள். இவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பலரை கொல்வார்கள்'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications