கும்பமேளாவில் 30 கோடி வருமானம்.. அதுல பாதிய வருமான வரியா கட்டிடுங்க! படகோட்டிக்கு ஷாக் கொடுத்த ஐடி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிராயாக்ராஜில் மகா கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. அந்த கும்பமேளாவில் படகோட்டி ஒருவர் 30 கோடி ரூபாய் சம்பாதித்ததாக உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமையுடன் கூறியிருந்தார். இந்த நிலையில் 30 கோடி ரூபாய் சம்பாதித்த படகோட்டி 13 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தியது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெற்றது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடிக்கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். மேலும் பல்வேறு நாடுகளில் தலைவர்கள், கௌதம அதானி, முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் அங்கு புனித நீராடினர்.
இந்த நிலையில் கும்பமேளா விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச மாநில சட்டசபையில் காரசார விவாதம் நடத்தது. அதில் கும்பமேளா மூலம் மக்களுக்கு கிடைத்தது என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் இது தொடர்பாக பதில் அளித்து பேசிய மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கும்பமேளா பலரது வாழ்வில் ஒளி ஏற்றி இருக்கிறது. குறிப்பாக திரிவேணி சங்கமத்தை ஒட்டி வசித்து வரும் படகோட்டி ஒருவர் 30 கோடி ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருந்தார்.
தொடர்ந்து அவர் யார் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. திரிவேணி சங்கமத்திற்கு அருகே வசிக்கும் அரயில் கிராமத்தைச் சேர்ந்த பிந்து மெஹ்ரா என்பவர் தான் அவர். கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கும்பமேளாவில் 130 படகுகள் மூலம் பக்தர்களை அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் மூலம் சராசரியாக 23 லட்சம் ரூபாய் அவர்கள் லாபம் பார்த்ததாகவும், இதன் மூலம் 45 நாட்களில் 30 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே அவர் எப்படி 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டினார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் பிந்து மெஹராவுக்கு சிக்கல் முளைத்திருக்கிறது. 45 நாட்களில் 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நிலையில் சமூக வலைதளங்களில் கிடைத்த தகவல் படி வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்திய வருமான வரி சட்டம் 1961இன் படி பிந்து மெஹ்ரா 12 கோடியே 8 லட்சம் ரூபாயை வருமான வரியாக செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கும்பமேளா தொடங்குவதற்கு முன் மிகவும் சிரமப்பட்டு ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மட்டுமே சம்பாதித்து வந்த அவர் கும்பமேளாவுக்காக தங்கள் வீட்டில் இருந்த நகைகள், நிலப்பத்திரம் உள்ளிட்டவற்றை அடகு வைத்து அதன் மூலம் படகுகள் வாங்கி இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த குடும்பமே ஒரு மாதம் உழைத்து கோடீஸ்வரர் நிலைக்கு உயர்ந்த நிலையில் அதில் கிட்டத்தட்ட பாதி பணத்தை வருமான வரியாக செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அந்த குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இதற்கு கண்டனம் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications